உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரவமிசத்தோர்

9

ஸ்ரீ உ. வே. சாமிநாத ஐயரவர்களால் நன்கு ஆராயப்பெற்று நமக்குக் கிடைத்துள்ளன. ஒவ்வொரு பத்தும் ஒவ்வொரு சேரனது அருமை பெருமைகளைக் கூறுவதாய், ஓரொரு புலவராற் பாடப்பெற்றதாம். இப்பத்துக்கள் ஒவ்வொன்றன் முடிவிலும் பதிகங்களும் வாக்கியங்களும் இந்நூலைத் தொகுத்த புலவரால் அமைக்கப்பட்டுள்ளன. தொகுத்த புலவர் இன்னாசென்று தெரியவில்லையேனும் பழமையுடையவராகவே தோற்றுகின்றார். இவர் கூற்றாகவுள்ள பதிகங்களும் வாக்கியங்களும் அவ்வச்சேரனைப்பற்றிய செய்திகள் பலவற்றை அறிவிப்பதோடு, பாடினார் பெயர் முதலிய வரலாறுகளையும், அப்புலவர் பெற்ற பரிசில்களையும், பாடல் பெற்ற அரசனது ஆட்சிக்காலங்களையும் நன்கு விளக்குவன. இந்நூலிற்கண்ட விஷயங்களால், செங்குட்டுவனுள்ளாகச் சேரர் எண்மர் வரலாறுகளைச் சுருக்கமாகத் தெரியலாம். அவர்களை அடியில் வருமாறு காண்க.

(1) இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன்.

(2) பல்யானைச் செல்கெழு குட்டுவன்.

(3) களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்.

(4) கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்.

(5) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.

(6) செல்வக் கடுங்கோ வாழியாதன்.

(7) பெருஞ்சேரலிரும்பொறை.

(8) இளஞ்சேர லிரும்பொறை.