பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரன்-செங்குட்டுவன்

தந்தையும் அவன் மாற்றாந்தாய்ச் சகோதரரும்.


மேற்கூறிய சேரர்கட்கும் செங்குட்டுவனுக்கு முள்ள தொடர்பை இனி ஆராய்வோம். செங்குட்டுவனைப் பற்றிய ஐந்தாம் பத்துப்[1] பதிகத்துள், அவன், “வடவ ருட்கும் வான்றோய் நல்லிசைக் - குடவர் கோமான் நெடுஞ் சேரலாதனுக்கு” மகன் என்று கூறப்படுகின்றான். இதனால் இரண்டாம்பத்திற் புகழப்படும் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதனே நம் சேரன் தந்தை என்பது விளங்கும். “ஆரியர் துவன்றிய பேரிசை யிமயந் - தென்னங் குமரியொ டாயிடை, மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே”[2] என இவனது வடதிசை வெற்றியை அவ்விரண்டாம்பத்தே கூறுதல் காண்க. செங்குட்டுவன் உடன் பிறந்தவரான இளங்கோவடிகள், இமயம் வரை வெற்றிப்புகழ் பரப்பிய தம் தந்தை செயலை, “குமரி யொடு வடவிமயத் - தொருமொழிவைத் துலகாண்ட சேரலாதற்கு” எனக் கூறுதலும் இங்கு அறியத்தக்கது.

இந்நெடுஞ்சேரலாதன், உதியஞ்சேரலென்ற வேந்தனுக்கு வெளியன் வேண்மான்[3] மகள் நல்லினியிடம் பிறந்தவன். இவனது அரிய செயல்களாவன :- இமயம்வரை படையெடுத்துச் சென்று அம்மலைமேல் தன் இலாஞ்சனையாகிய வில்லைப் பொறித்தது ; தமிழகமுழுமையுந் தன் செங்கோலின் கீழ் வைத்தாண்டது; தன்னுடன் பொருத ஆரிய வாசரை வென்று அவரை வணங்கச்செய்தது ; யவன அரச-


  1. இங்ஙனங் குறிக்குமிடமெல்லாம், பதிற்றுப்பத்தினையே கொள்க.
  2. பதிற்றுப். 1.
  3. “வீரைவேண்மான் வெளியன் தித்தன்” எனப்படுமவன் இவன் போலும். (தொல். பொருளதி. 114உரை )