பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

சேரன்-செங்குட்டுவன்

வந்த காலையில், மஞ்சுசூழுஞ் சோலைகளையுடைய மலைவளத்தைக் கண்டுகளிக்க எண்ணியவனாய்—அரமகளிருடன் விளைபாடலை விரும்பிய தேவேந்திரன் தன் படைகளை நூற்று நாற்பதியோசனை தூரம் பரப்பி ஐராவதத்தில் ஆரோகணித்துச் செல்வதுபோல—தன் பெரும்பரிவாரங்கள் சூழச்சென்று, திருமாலின் மார்பிடையே விளங்கும் முத்தாரம் போல், மரங்களால் அழகுமிக்க மலையினின்றிழியும் பேரியாறு என்னும் ஆற்றங்கரையின் மணல்மிக்க எக்கரிலே தங்குவானாயினன். அக்காலத்து, குன்றக்குரவை நிகழ்த்தும் மலைமகளிர் பாடல்களும், அம்மலையில் முருகபூசை செய்யும் வேலனது பாட்டும், தினைமாவிடிப்போருடைய வள்ளைப்பாட்டும், தினைப்புனங்களினின்றெழும் ஒலியும், தேனெடுக்குங் குறவர் நிகழ்த்தும் ஓசையும், பறையோசை போன்ற அருவியின் ஒலியும், புலியோடு பொருகின்ற யானையின் முழக்கமும், தினைப்புனங் காவலிற் பரண்மிசையிருப்போருடைய கூப்பீடுகளும், யானை பிடிக்கும் இடங்களிலே குழியில் வீழ்ந்த வேழங்களைப் பாகர் பழக்கும் சப்தமும், ஆங்குச் சென்ற சேனைகளது ஆரவாரத்தோடு கலந்தொலித்தன. அந்நிலையில், மலைவாணராகிய வேடுவர் பலர் ஒருங்குகூடி,

“யானைவெண் கோடு மதிலின் குப்பையும்
மான் மயிர்க் கவரியும்[1] மதுவின் குடங்களும்
சந்தனக் குறையும் சிந்துக் கட்டியும்
அஞ்சனத் திரளும் அணியரி, தாரமும்
ஏல வல்லியும் இருங்கறி வல்லியும்

கூவை நீறுங் கொழுங்கொடிக் கவலையும்

  1. மான்மயிராகிய வெண்சாமரை.