பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடநாட்டியாத்திரை.

51



தெங்கின் பழனுந் தேமாங் கனியும்
பைங்கொடிப் படலையும்[1] பலவின் பழங்களும்
காயமுங்[2] கரும்பும் பூமலி கொடியும்
கொழுந்தாட் கமுகின் செழுங்குலைத் தாறும்
பெருங்குலை வாழையி னிருங்கனித் தாறும்
ஆளியி னணங்கும்[3] அரியின் குருளையும்
வாள்வரிப்[4] பறழும் மதகரிக் களபமும்
குரங்கின் குட்டியும் குடாவடி யுளியமும்[5]
வரையாடு வருடையும் மடமான் மறியும்
காசறைக் கருவும்[6] மாசறு நகுலமும்
பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும்

கானக் கோழியும் தேமொழிக் கிள்ளையும்”

என்ற பண்டங்களைத் தங்கள் தலைமேலே தாங்கிக்கொண்டு—வஞ்சிமா நகரில் அரசனது சமயம் பெறாது தத்தம் திறைகளுடன் வாயிலிற் காத்துநிற்கும் பகையரசர்போல, அம் மலை வாணர் செங்குட்டுவன் திருமுன்பு வந்துநின்று ‘ஏழ்பிறப் படியேம், வாழ்கநின் கொற்றம்’ என்று அவனடி பணிந்து, “வேந்தர் வேந்தே! யாம் வாழும் மலையின்கணுள்ள காட்டு வேங்கையின் கீழே, மங்கையொருத்தி, ஒருமுலையிழந்தவ ளாய்ப் பெருந்துயரோடும் வந்து நிற்க, தேவர்கள் பலரும் அவளிடம் வந்து அம்மங்கைக்கு அவள் காதற்கொழுநனைக் காட்டி, அவளையும் உடனழைத்துக்கொண்டு எங்கள் கண் முன்பே விண்ணுலகஞ்சென்றனர்;[7] அவள் எந்நாட்டாள்


  1. பச்சிலைமாலை
  2. வெள்ளுள்ளி
  3. அணங்கு - குட்டி
  4. வாள்வரி -புலி
  5. குடாவடியுளியும் - பிள்ளைக்கரடி
  6. காசறைக்கரு - கத்தூரிக்குட்டி.
  7. இச்செய்தி சிலப்பதிகாரப் பதிகத்துக் கண்டது.