பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120 சேர மன்னர் வரலாறு



இதுகேட்ட சேரலாதன், அவரை வியந்து நோக்கினான். அக் குறிப்பறிந்த கண்ணனார், “வேந்தே, மன்னுயிர்க்கு ஈதலில் குன்றாத கைவண்மையும், பெருவலியும், உயர்ந்தோர்க்கு உறுதுணையாகும் சிறப்பும் உடையனாய், நீ திருமால் போலக் குன்றாத வலி படைத்திருக்கின்றாய். நின் பண்பு பலவும் நினது நாட்டில் விளங்கித் தோன்றக் கண்டதனால், நின் துப்பெதிர்ந்து அழிந்த பகைவர் நாட்டையும் கண்டு வருவேனாயினேன்” என்று செப்பினார்.

தன்னைப் பகைத்துத் தன்ன தொடு பொருதழிந்த வேந்தர் பொருட்டுக் கண்ணனார் இவ்வாறு கூறு கின்றார் என்பதை நெடுஞ்சேரலாதன் நன்குணர்ந்து கொண்டு, “சான்றீர், யாம் புறப்பகை கடியும் செயலில் ஈடுபட்டிருக்குங்கால் நாட்டிற்குள் பகைமை புரிந்த இவ் வேந்தர் செயல் பொறுக்கலாகாக் குற்றமாவது நீவிர் அறியாததன்று; அவர்க்கு அருள் செய்து புகலளிப்பது பகைப் பயிரை நீர் பாய்ச்சி வளர்ப்பது போலாம்” என மொழிந்தான். “வேந்தர் அறியாமையாற் செய்த குற்றத்துக்கு அவரது நாட்டு மக்கள் பெருந் துன்பம் உழப்பதே ஈண்டுக் கருதத் தக்கது’ என்பாராய், “பண்பு புன்செய்க் கொல்லைகளாய் இருந்தவை நாட்டு மக்களால் நீர் வளம் பொருந்திய வயல்களாயின; காட்டுப்பன்றி உழும் புனங்கள் வளவிய வயல்களாகச் சிறந்தன; அவ் வயல்களில் கரும்பின் பாத்தியிற் பூத்த நெய்தலை எருமையினம் மேய்ந்து இன்புற்றன; மகளிர் துணங்கை யாடும் மன்றுகளும், முதுபசு மேயும் பசும்புற்றரைகளும், தென்னையும் மருதும் நிற்கும்