பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218 சேர மன்னர் வரலாறு



தங்கியிருந்தான். அதனோடு மகளிர் பலர் இருந்தனர். அக்காலத்தே, அவனைக் கண்ட நச்செள்ளையார், விறலி யொருத்தியை அவன்பால் ஆற்றுப்படுக்கும் வகையால் ஒரு பாட்டைப் பாடினர். அதன்கண் நறவூர் கடற்கரையில் உளதென்றும், அங்கிருக்கும் மறவர், கடலலை மோதுவதால் எழும் துளிகளையும் குளிர் முகிலின் துளிகளையும் கலந்து வீசும் ஊதைக்காற்றால் உடல் நடுங்கியிருப்பர் என்றும், அவன் அம் மகளிரிடையே இன்புற்றிருப்பினும் அவன் உள்ளம் போர்வினையையே கருதியிருக்கும் என்றும், அவனை அங்கே பாடிச் சென்று கண்டால் அவன் தான் பகைப்புலத்து வென்ற அரும் பொருள்களை நல்குவன் என்றும்[1] குறித்துள்ளார்.

பிறிதொருகால், சேரலாதன் வஞ்சிநகர்க்கண் இருந்தபோது, இனிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இரவுக் காலத்தில் ஆடல் மகளிர் சிலர் துணங்கை ஆடலுற்றனர். உயரிய கால் விளக்கை நிறுத்திப் பெருவிளக்கம் செய்யப்பட்டது. துணங்கைக் களத்தில் முழவு முதலிய இசைக்கருவிகள் முழங்கின; அரங்கேறும் மக்கட்கு வேந்தர் தலைக்கை தந்து, அவர்களுடைய ஆடல் பாடல்களைத் தொடங்கி வைப்பது வழக்கம். அவ்வாறே சேரலாதன் ஆடல் மகள் ஒருத்திக்குத் தலைக்கை தந்து துணங்கையாடி வந்தான். மனைக்கண் புகுதலும் அவன் மனைவி ஊடிப் பிணங்கலுற்றான். வேந்தன், அவளது ஊடலைத் தீர்க்கும் இன்சொற்கள்


  1. பதிற். 60.