பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248 சேர மன்னர் வரலாறு



வென்றி எய்தினான். மேலும், தன் நாட்டவர்க்கு வாழிடம் சிறிது என்று சொல்லி முன்னையினும் விரிவான நிலப்பகுதியைத் தன் நாட்டோடு சேர்த்துக் கொண்டான். பின்பு அங்கே பாசறை நிறுவி, அந் நாட்டில் போர்வினையால் கெட்ட குடிகளைத் திருத்திப் பொறை நாட்டினும் பூழி நாட்டினும் போதிய இடமின்றி வருந்திய நன்மக்களைக் குடியேற்றிச் செவ்விய காவல் முறைகளை நன்கு வகுத்திருந்தான். சின்னாட்குப்பின் வினை முடிந்ததும் வேந்தன் மீளாமை கண்ட கபிலர், கொங்கு நாட்டில் அவன் தங்கியிருந்த பாசறைக்கு வந்து சேர்ந்தார். அவரோடு வேறு சில சான்றோரும் வந்தனர். அவர்களைச் சேரமான் அன்போடு வரவேற்று இன்புற்றான். பின்பு நாட்டின் நலமறிவான் போல அச் சான்றோரை நோக்கினான். அவர்களும் அக் குறிப்பறிந்து, நாட்டின் நல மிகுதியை எடுத்து விளம்பினர். மகிழ்ச்சி மீதூர நம் செல்வக் கடுங்கடுங்கே; கபிலரை நோக்கினான்; அவர், “பகைவரால் கெட்ட குடிகளை நல்வாழ்வு பெறுவித்த வேந்தே, தான்வாழ ஏனோர் தன் போல் வாழ்க என்ற அசையாக் கொள்கையுடையை நீ; நின்னைப் போலவே நின் முன்னோரும் இருந்தமையால், இனிய ஆட்சியைச் செய்தனர்; நிலம் நற்பயன் விளைவித்தது; வெயிலின் வெம்மை தணியுமாறு மழை தப்பாது பெய்தது; அதற்கேற்ப வெள்ளிமீன் உரிய கோளிலே நின்றது; நாற்றிசையிலும் நாடு நந்தா வளம் சிறந்து விளங்கிற்று[1]


  1. பதிற். 59.