பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30 சேர மன்னர் வரலாறு



மென இராபர்ட்டு சூவெல் கூறுகின்றார்[1] . இவை பெரும்பாலும் நூல் வழக்கமாய் நின்றெழிந்தனவே யன்றி, இடைக்காலச் சோழ பாண்டிய கொங்கு கன்னட வேந்தர் காலத்தும் நடைமுறையில் இருந்ததில்லை; இச் செய்தி இந் நாட்டுக் கல்வெட்டுகளால் விளங்குகிறது[2]. இவற்றுள் துளு நாடென்பது கோசர்கள் வாழும் நாடு[3] என்று மாமூலனாரால் அகநானூற்றிற் குறிக்கப்பெறுகிறது. வானவாற்றுக்கு அண்மையில் இருக்கும் பாழி நகரம் வேளிர்க்குரியதெனப் பரணர் கூறுகின்றார்[4]. இப்பாழிநகர் இப்போது பாட்கல் (பாழிக்கல்) என வழங்குவதால், கொண்கானத்தின் வடக்கில் இருந்த நாடு வேளரிது வேளகம் (Belgaum) என்னும் வேணாடு என்பது இனிது காணப்படும். பிற்காலத்தே வேணாட்டின் வட பகுதி வேளகமென்றும் தென்பகுதி வானவாசி யென்றும் வழங்கலாயின. கொண்கான நாட்டிலுள்ள ஏழில்மலை பிற்காலத்தே எலிமலை யெனக் குழறிக் கூறப்படுகிறது. இக்குழறுபடையை அடிப்படையாகக் கொண்டு கேரள நாட்டு வடமொழியாளர் மூசிக நாடு என்று ஏழில் மலைப் பகுதிக்குப் பெயர் வழங்கியிருக்கின்றனர்[5].

இனி, இடைக்காலத்தும் பிற்காலத்தும் வாழ்ந்த திருவிதாங்கூர் வேந்தர்கள் தம்மை வேணாட்டடிகள் என்று கூறிக் கொள்வதை அவர் தம் கல்வெட்டுகள்[6] வேணாடென்பது வானவநாடு[7] என்பதன் திரிபு எனக்


  1. Archeological Survey of South India Vol. ii P. 196.
  2. T.A.S. Vol. ii. p. 106.
  3. அகம், 15.
  4. ஷை 258
  5. T.A.S 11 பக். 87-113.
  6. A.R. No 39-41 of 1936-7.
  7. K.P.P. Menon’s History of Kerala Vol. ii P.5.