பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

350 சேர மன்னர் வரலாறு



வேட்கும் மூவகைத் தீயும் காட்சி அளித்தன. “ஒன்று புரிந்து அடங்கிய இரு பிறப்பாளர் முத்தீப் புரைய'’ இருந்த மூவரையும் நோக்கி, “கொடித்தேர் வேந்தர்களே” என்று சொல்லி, “விண்ணுலகு போலப் பெருநலம் தரும் இந்நிலவுலகு முற்றும் தமக்கே உரித்தாக உடைய ராயினும், வேந்தர் இவ்வுலகை விட்டு நீங்குங்கால், இதுவும் அவருடன் செல்வது கிடையாது. ஏற்றவர் இருந்த காலையும் தவமுடைார் எவரோ அவர் பாலே இது செல்லும்; அத்தவப் பயனையுடைய நீவிர் மூவரும் செய்யத் தக்கது இதுவே; உங்களை அடைந்து இரந்து நிற்கும் பார்ப்பார்க்கு அவர் வேண்டுவனவற்றை நீரொடு பூவும் பொன்னும் சொரிமின். மகளிர் பொற்கலங்களில் பெய்து தரும் தேறலையுண்டு மகிழ்ச்சி கூர்ந்து உறைமின். உங்களை வந்தடைந்து இரக்கும் இரவலர்க்கு அருங்கலன்களைக் குறைவின்றி நல்குமின். இவ் வகையால் உங்கட்கெனப் படைத்தோன் விதித்த நாளெல்லை முற்றும் நீவிர் வாழ்தல் வேண்டும். இவ்வாறு வாழச் செய்த நல்வினையல்லது இறுதியில் துணையாவது பிறிது யாதும் இல்லை. யான் அறிந்த அளவு இதுவே. இனி, நீங்கள் வானத்தில் தோன்றும் மீன் களினும், எங்கும் பரந்து நின்று பெய்யும் மழைத் துளியினும் உங்களுடைய வாழ்நாள் பெருகிப் பொலிக[1]” என்று வாயார வாழ்த்தினர். ஏனைச் சான்றோர் பலரும் பெருமகிழ்ச்சியுற்று வாழ்த்தினர்.

சேரமான் மாவண்கோ ஒளவையார் வழங்கிய வாழ்த்தினைப் பெற்றுக்கொண்டு ஏனை எல்லாரிடத்தும் இன்ப விடை பெற்று நீங்கினான்.


  1. புறம். 67.