பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரநாட்டின் தொன்மை 59



(Modora) இருக்கின்றான்; பாரேசு துறைக்குக் கோட்ட நாராவிலிருந்து மிளகுப் பொதிகள் வருகின்றன என இவ்வாறு பிளினி என்பார் எழுதியுள்ளார்[1].

பிளினியினுடைய குறிப்புகளால் கி.பி. முதல் நூற்றாண்டில் சேர நாடு தென் கொல்லம் வரையில் பரந்திருந்தமையும் அதன் தென் பகுதி தென்பாண்டி நாடென்பதும் தெளிவாய் விளங்குகின்றன. இவ் வகையில் பெரிப்புளுசு நூலாசிரியர் கூறுவனவும் ஒத்திருக்கின்றன. ஆயினம், முசிறித்துறை செல்வத்தாற் சிறப்புடைய மாநகரம் என்றும், வடநாடுகளிலிருந்தும் எகிப்து நாட்டிலிருந்தும் எப்போதும் கலங்கள் இத் துறைக்கு வருவதும் போவதுமாக உள்ளன என்றும் பெரிப்புளுசு நூலாசிரியர் கூறுகின்றார்[2]. அவர் கூற்று, “சேரலர், சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க, யவனர் தந்த வினைமாண் நன்கலம், பொன்னொடு வந்து கறியொடு பெயரும்[3]” என்ற சங்கநூற் கூற்றால் வலியுறுகிறது.

கி.பி. 126-61ல் வாழ்ந்த தாலமி (Ptolemy) என்பார் எழுதியுள்ள குறிப்பில் சேர வேந்தர் கேரள போத்திராசு (Carelabothras) என்றும், அவர்களது தலைநகர் கரவரா (Karoura) என்றும் குறிக்கப்படுவது காண்கின்றோம்[4]. இது கருவூர் என்பதன் திரிபு. இக் கருவூர் இப்போது வஞ்சி நகர்க்கு வடக்கில் எட்டுக் கல் அளவில் கடற்கரையில் உளது.


  1. W. Logan’s Malabar P. 256.
  2. Ibid P. 254.
  3. அகம். 149.
  4. Ibid P. 253. M Crindler’s Translation of the periplus of the Erythraen Sea 53-6.