பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

சைவ இலக்கிய வரலாறு

பிருதிவிபதியைத் துணையாகக் கொண்டு வரகுணபாண்டி யனைத் திருப்புறம்பயத்துப் போரில் வெற்றி கொண்டான். பின்னர்ச் சிதைந்தொழிந்த பல்லவருட் சிலர் புலிகாட்டிலும் சிலர் நுளம்பபாடி நாட்டிலும் சில காலம் காட்டுத் தலைவர்களாக நிலவியிருந்து மறைந்து போயினர். புலி நாடென்பது சித்தூர் மாவட்டத்துப் புங்கனூர்ப்பகுதி: நுளம்பபாடி பெல்லாரி மாவட்டத்து ஒரு பகுதியும் மைசூர் காட்டின் ஒருபகுதியும் கொண்டது.

தொண்டைநாட்டிற் பல்லவர்கள் அரசு நிறுவி ஆட்சி புரிந்து வருங்காலத்தில், தென்பாண்டி நாட்டில் பாண்டி வேந்தர்கள் ஆட்சிபுரிந்து வந்தனர். அவர்கள் வரலாறு வேள்விக்குடிச் செப்பேட்டைக்கொண்டும் பிறவற்றைக் கொண்டும் அறிஞர்களால் ஆராயப்பெற்றுளது.

பாண்டியன் கடுங்கோன்: இடைக்காலப் பாண்டியருள் இவனே முதல்வனாகக் கருதப்படுகிறான். களப்பிரர் ஆட்சியிலிருந்து தென்பாண்டி நாட்டை விடுவித்த பெருந்தகை இவனேயாவன், இவ்ன் கி.பி. 575 முதல் 600 வரை ஆட்சி செய்தான்.

மாறவன்மன் அவனி சூளாமணி (கி.பி. 600-625):இவன் பாண்டியன் கடுங்கோனுடைய மகன்; மாறவன்மன் என்ற சிறப்பினைப் பெறும் மன்னருள் இவனே முதல்வன் என்பர்.

சடையவன்மன் செழியன் சேந்தன்) (கி.பி. 625-640: இவன் அவனி சூளாமணியின் புதல்வன்; சீனநாட்டு யுவான் சுவாங் காஞ்சிநகர்க்கு வந்திருக்கையில் இவன் இறந்தான்; இச்செய்தியை அச் சீன அறிஞர் குறித்துள்ளார்.

மாறவன்மன் அரிகேசரி (கி.பி. 640-670): இவன் செழியன் சேந்தனுக்கு மகன்; சிவன்பால் பேரன்புடையவன். இவனே கூன்பாண்டியன் என்றும், சுந்தரபாண்டியன் என்றும் திருவிளையாடற் புராணம் கூறும். நம்பியாரூரரால் நெடுமாறன் எனக் குறிக்கப் பெறும் பேறு பெற்றவன் இவனே.