பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநாவுக்கரசர்

151

கருத்துகந்தார்[1] என்றும் "நல் அருந்தவத்த கணம் புல்லர்”[2] என்றும் கூறுகின்றார்.

6. அமர்நீதியார்.

இவரது வரலாறு திருத்தொண்டர் புராணத்துள் விரிவாய்க் காணப்படுகிறது. "நாட்கொண்ட தாமரைப்பூத்தடம் சூழ்ந்த நல்லூரகத்தே, கீட்கொண்ட கோவணம்கா என்று சொல்லிக் கிறிபடத்தான் வாட்கொண்ட நோக்கி மனைவியொடும் அங்கோர் வாணிகனை, ஆட்கொண்ட வார்த்தை உரைக்கு மன்றோ இவ்வகலிடமே"[3] என்று திருநாவுக்கரசர் சிறப்பித்தருளுகின்றார். பிற்காலத்திலும் அமர்நீதியார் என்ற பெயருடன் பல தலைவர்கள் தமிழகத்தில் இருந்திருப்பதைக் கல்வெட்டுக்கள்[4] கூறுகின்றன. இதனால், அமர்நீதியாரது வரலாறு தமிழ்மக்களிடையே மிக்க செல்வாக்குப் பெற்றிருந்தமை விளங்கும். "வாணிகனை ஆட்கொண்ட வார்த்தை உரைக்குமன்றோ இவ்வகலிடமே" எனக் கூறுவது நோக்கின் அமர்நீதியாரை இரண்டொரு நூற்றாண்டு நம் நாவரசர்க்கு முற்பட்டவராகக் கருதலாம்.

7. நமிநந்தி.

இவர் பெயரைத் திருத்தொண்டத் தொகையும் பிறவும் நமிநந்தியென்றே வழங்குகின்றன ; அதுகொண்டு பிற்காலத்து மக்கள் பலர் தமக்கு நமிநந்தி யென்றே இயற்பெயர் கொண்டிருப்பாராயினர்[5]. இந்த, நமி என்னும் சொல் நம்பி என்பதன் மரூஉ வாகும் , திருத்தொண்டத்


  1. திருநா. 226 : 7.
  2. திரு நா. 50:9.
  3. ௸ 98 : 7.
  4. சோழ நாட்டு இந்தளூர் நாட்டுக் கஞ்சனூருடையான் கஞ்சாறன் அமர்நீதியான பல்லவதியரையன் திருவொற்றியூருடையார்க்குத் திருநுந்தா விளக்குக்குப் பொன்னளித்தது -(A. R. 188 of 1912).
  5. நமி நந்தியடிகள் மகன் பெரியன் -(A. R. .No. 149 of 1932–33*)