பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பியாரூரர்

229

யும் அடியார்களையும் வழிபாடு செய்தல் வேண்டும்;[1] இவ் வழிபாட்டால், வெளிறு தீரும்; நின்ற பாவம் நீங்கும்;[2] ” மலமெலாம் அறும்; வினைகள் வந்து சாரா.[3]

இங்ங்னம், மக்கட்கு நல்ல அறிவு வாழ்வு வழங்கும் நம்பியாரூரர், புலவர் பெருமக்களை நோக்கிச் சிறப்பாகச் சில நல்லுரைகளைச் செப்புகின்றார். உலகியல் நிகழ்ச்சிகளைப் புலன்களால் வாங்கித் தம் புலமை கருவியாக இனிய சொற்களால் தொடுத்து யாப்பமைதியும் இன்னிசையும் பொருந்திய பாட்டுக்களில் உருப்படுத்திப் படிப்போரும் படிக்கக் கேட்போருமாகிய அறிஞர் மனக்கண்ணில் உயிரோவியம் செய்து காட்டும் உரமுடையோர் புலவர் என உரைக்கப்படுவர். ஆயினும், அவர்கள் உலகில் வாழ்வது வேண்டிச் செல்வர்களே அடைந்து இல்லது புனைந்து பாடி அவர்களை மகிழ்வித்து, அதனால் அவர் நல்கும் பொருளைப் பெறும் செயல் இடைக் காலத்தே பெருகிற்று. புகழ்விருப்பால், செல்வர்கள் புலவர்களின் பின்னின்றது போக, பொருள் விருப்பால் புலவர்கள் செல்வர்களைப் பின்னின்று வாழும் நிலைமை நம்பியாரூரர்க்குப் பெருவருத்தம் விளைத்தது. செல்வரது செல்வமும் புலவரது புலமையும் இறைவன் உடைமையாதலின், புலவராயினார், இறைவனையே பாடுதல் வேண்டும்; அதனால் அவர்கட்கு உலகியல் வாழ்வும் பேரின்ப வீடும் எய்துவது எளிது என வற்புறுத்தினார். புலவர்களை அருளொடு நோக்கி, “புலவீர்காள்,பொய்ம்மையாளர்,கொடுக்கிலார், நலமிலாதார், குலமிலாதார், நோயர், நொய்யர், கல்லாதவர், வஞ்சர், சழக்கர், துட்டர் முதலிய பலரையும் பாடுதல் ஒழிமின். இவர்களை எத்துணை நல்லர் என்று இல்லது புனைந்து இறப்பப் புகழ்ந்து பாடினும் கொடார்; ஆகவே, இச்செயலை விட்டு, இறைவனைப் பாடுமின்; இம்மையில் இன்ப வாழ்வும் அம்மையில் சிவலோக வாழ்வும் உண்டாம்; இதற்கு “யாதும் ஐயுறவு இல்லை”[4] என வற்புறுத்துகின்றார்.


  1. சுந். தே. 78:10.
  2. சுந். தே. 81 : 3.
  3. ௸ 35 : 8.
  4. ௸ 34 : 1.