பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. ஏனாதி சாத்தஞ் சாத்தனார்

ஏனாதி சாத்தஞ் சாத்தனார் பாண்டி நாட்டுப் புலவர்களுள் ஒருவர். இவருடைய தந்தைபெயரும் சாத்தன் என்பது ; அதனால் தான், இவர் சாத்தஞ்சாத்தனார் என வழங்கப்படுகின்றார். சாத்தனார் நல்ல தமிழ்ப் புலமை பெற்றிருந்ததோடு போராற்றுவதிலும் தலைசிறந்து விளங்கினார். அக்காலத்துப் பாண்டிவேந்தன் அவர்க்கு ஏனாதி யென்ற பட்டம் தந்து சிறப்பித்தான். அது கொண்டே இவர் ஏனாதி சாத்தஞ் சாத்தனார் என்று பாராட்டப்படுவாராயினர்.

சாத்தனார் சிறந்த புலவராகவும் ஏனாதி மோதிரம்பெற்ற தானைத்தலைவராகவும் விளங்கிய காலத்தில், பாண்டி நாட்டை ஆண்ட வேந்தன் பாண்டியன் நெடுஞ்சடையன் என்பானாவன். அந்நாளில் பாண்டி நாட்டுப் பாகனூர்க் கூற்றத்து வேள்விக்குடி யென்னும் ஊர்க்கு உரியனாகிய கொற்கை கிழான் காமக்காணி நற்சிங்கன் என்பவன் கூடல் நகர்க்கு வந்து அரசன் திருமுன் நின்று, தங்கள் முன்னோருள் ஒருவனான காமக்காணி நற்கொற்றனுக்குப் பண்டைப் பாண்டிவேந்தருள், முன்னோனான பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி தான் செய்த வேள்விக்கொடையாக வேள்விக் குடியை நல்கினான் என்றும், அஃது இடைக் காலத்தில் பாண்டி நாட்டிற் புகுந்து இடர்விளைத்த களப்பிரர்களால் அரசியலிற்சேர்க்கப்பட்டது என்றும், தனக்கு மீள அவ்வேள்விக்குடியைப் பிரமதாயமாக நல்கவேண்டும் என்றும் விண்ணப்பம் செய்து கொண்டான். அதுகேட்ட பாண்டியன், வேள்விக்குடிக்கும் அவனுக்கு பள்ள உரிமையை வேறு சான்று காட்டி நிறுவுமாறு பணித்தான் ; அவனும் அவ்வாறு செய்து தன் உரிமையை நிறுவிக் காட்டினான். நாடவர் கூடிய பேரவையில் இதனை நடுவு இருந்து கேட்ட பாண்டியன் நெடுஞ்சடையன் மறுபடியும் வேள்விக்குடியென்னும் ஊரை நற்சிங்கனுக்குப் பிரட்தாயமாக நல்கிச் செப்பேட்டிற் பொறித்துத் தந்தான். இந்-