பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

சைவ இலக்கிய வரலாறு

பிள்ளையாரை எதிர்கொண்டு சென்று காளத்திமலையைக் காட்டிப் பிள்ளையாரைச் சிறப்பித்தார்கள். பிள்ளையார் காளத்திமலையைக்கண்டு வழிபட்டு அங்கே அன்புருவாய் நிற்கும் கண்ணப்பரைச் சிறப்பித்துத் திருப்பதிகம் பாடிக் காளத்தியிலேயே சில நாட்கள் தங்கினார். அக்காளத்தியிலிருந்தே வடகயிலாயம், திருக்கேதாரம் முதலிய பதிகளை நினைந்து பல பதியங்கள் பாடிச் சிவபெருமானை வழிபட்டு மகிழ்ந்தார்.

பின்னர், ஞானசம்பந்தப்பிள்ளையார் தெற்கு நோக்கிப் புறப்பட்டுத் திருவேற்காடு, திருவலிதாயம் முதலிய திருப்பதிகளில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபட்டுக் கொண்டு திருவொற்றியூரை வந்தடைந்தார்.

ஞானசம்பந்தர் தென்னாட்டில் இருக்கையில், திருமயிலாப்பூரில் வாழ்ந்த சிவநேசர் என்பார், தம்முடைய ஒரு மகளை மணந்து கொள்பவனுக்குத் தமது செல்வ முற்றும் உரிமை செய்யக் கருதி மகளைப் பேரன்புடன் வளர்த்து வந்தார், வருகையில், ஞானசம்பந்தப் பிள்ளையாரின் பெருமை அவர் செவிக்கு எட்டிற்று. அது முதல் தம்முடைய மகளை ஞானசம்பந்தருக்கு உரிமை செய்துவிட உறுதி கொண்டுவிட்டார். இவ்வாறிருக்கும்போது, அப்பெண், ஒரு நாள் பூப் பறிக்கச் சென்ற விடத்துப் பாம்பொன்று தீண்டவே உயிர் துறந்தாள். அவள் பெயர் பூம்பாவையென்பது.

பூம்பாவை இறந்த பின் அவள் உடலை எரித்து என்புகளை யெடுத்து ஒரு குடத்தில் வைத்து, இவளை ஞானசம்பந்தருக்கு உரிமை செய்துவிட்டேனாதலால் அவர் வருங்கால் இதனை அவர்பாற் சேர்க்க வேண்டுமென வைத்திருந்தார் அந்தச் சிவநேசர். ஞானசம்பந்தர் திருவொற்றியூருக்கு வந்து ஒற்றியூர் ஆண்டவனை இனிய பாட்டுக்கள் பாடி வழிபட்டுக் கொண்டிருப்பதைச் சிவநேசர் கேள்வியுற்று, அவரை யடைந்து வணங்கி மயிலாப்பூருக்கு அழைத்து வந்தார். மயிலாப்பூர் இறைவன் கோயிற்குச் சென்று பதியம் பாடிப் பரவி நின்ற பிள்ளையார் சிவநேசரை நோக்கி, எற்புக்குடத்தைக் கொணருமாறு பணித்-