பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

சைவ இலக்கிய வரலாறு

பின்னரே தல யாத்திரை செய்யப் புறப்பட்டனர். இப்போது இவருக்கு எட்டு வயதெனக் கொண்டால் அது முதல் திருமணம் நடக்கும் வரையுள்ள காலம் எட்டு ஆண்டுகளாகும். திருப்புகலூர், திருவீழிமிழலை, மதுரை முதலிய சில தலங்களில் நீண்டகாலம் தங்கியிருந்தனர். இவர் திருச்செங்காட்டங்குடி வருவதற்கு முன் செய்த யாத்திரை மூன்று நான்கு ஆண்டுகள் சென்றிருக்கலாம். இவர் சோதியிற் கலந்தது சிறுத்தொண்டரை முதலில் சந்தித்ததற்கு நாலைந்தாண்டுகளுக்குப் பின்னர்த்தாம். சோதியிற்கலந்த காலம் கி. பி. 655-க்குச் சிறிது காலம் முன்னே யிருக்கலாம். இவர் சமணரையும் பெளத்தரையும் வாதில் வென்று சைவத்தைப் பரவச் செய்தனர்.'

முடிவாக,பேராசிரியர்,திரு. கா. சுப்பிரமணியப்பிள்ளையவர்கள், திருஞானசம்பந்தர் காலத்தைப்பற்றிப் பலரும் கூறிய முடிபுகளைத் திரட்டி, “திருஞானசம்பந்த மூர்த்திநாயனர் காலத்தைப்பற்றிப் பலர் பலவாறு கூறியதை மறுத்துக் காலஞ்சென்ற கனம் சுந்தரம் பிள்ளையவர்கள் ஒரு நூல் எழுதியுள்ளார்கள். திருஞானசம்பந்தர் காலத்தில் சிறுத்தொண்டர் செங்காட்டங்குடியில்ல் வாழ்ந்தனர். அவர் வாதாவியென்னும் வடநாட்டு நகரத்தைத் தம் அரசனுக்காகச் சென்று வென்றழித்தனரென்று பெரியபுராணம் கூறுகின்றது. வாதாவிநகரம் பம்பாய் மாகாணத்திலுள்ளது. அஃது அழிக்கப்பட்ட காலத்திலே அங்கே அரசாண்டவன் சாளுக்கிய வேந்தன் இரண்டாவது புலிகேசியென்பான் என்பது டாக்டர் ஹூல்ஷி என்பவர் வெளியிட்ட கல்வெட்டுப் பட்டயங்களாலே தெரிகின்றது. அவ்வரசன் காலம் கி. பி. 609-642. அதே காலத்தில் காஞ்சி நகரத்தில் முதல் நரசிம்மவன்மன் என்பான் அரசாண்டனன். சிறுத்தொண்டர் முதல் நரசிம்மவன்மன் படைத்தலைவனாக இருந்திருக்கவேண்டும். இதனால் திருஞானசம்பந்தர் காலமும் ஏழாவது நூற்றாண்டின் முற்பகுதியென்றே தெரிகின்றது. முதல் நரசிம்மவன்மனது, தந்தையாகிய குணபரன் என்பவன் காலத்தே அப்பர் சுவாமிகள் சைவ சமயம் புகுந்தனரென்று யூகிக்க