பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருஞானசம்பந்தர்

63

கொல்லிப்பண்ணில் ஒன்று[1] வெள்ளிப்பதிகமென்றும் கயப்பாக்கம் திரு. சதாசிவ செட்டியார் கூறுகின்றார். திருமுறைகண்டகாலத்துக் காணப்பட்ட திருப்பதியங்கள் முறையே பண்ணும் கட்டளையும் கண்டு தொகுக்கப்பட்டனவென்பது திருமுறைகண்ட புராணம் கூறுவது. அவ்வாறு பண்ணடைவு பெற்ற திருப்பதிகங்கள் முந்நூற் றெண்பத்து நான்காயின், பண்ணமைதி பெறாத யாழ்மூரியும் கொல்லி வெள்ளிப் பதிகமும் சேர, திருஞானசம்பந்தர் பாடியனவென இன்று நமக்குக் கிடைக்க வேண்டிய திருப்பதியங்கள் முந்நூற்றெண்பத்தாறாகும். ஆனால் பொதுவகையில் முந்நூற்றெண்பத்துநான்கு பதியங்களே கிடைத்துள்ளமையின், திருமுறை வகுக்கப்பெற்ற பின்பும் இரண்டு திருப்பதிகங்கள் மறைந்தனவெனக் கருத வேண்டியிருக்கிறது.

திருப்பதிகம் ஒவ்வொன்றிற்கும் பதினொரு பாட்டுக்கள் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றுள்ளன. அவற்றுள் திருவெழுகூற்றிருக்கை ஒன்றுமே தனிப்பாட்டாய் அமைந்தது. ஏனை யாவும் பதினொரு பாட்டுக்கள் கொண்ட திருப்பதிகங்களேயாகும். ஆகவே அவற்றின் கண் அடங்கிய பாட்டுக்களின் தொகை நாலாயிரத்து இருநூற்றுப் பதின்மூன்றாதல் வேண்டும். அவற்றோடு திருவெழுகூற்றிருக்கை சேர திருப்பாட்டுக்களின் தொகை நாலாயிரத்து இருநூற்றுப் பதின்நான்காதல் வேண்டும். ஆனால் இப்போது கிடைப்பன நாலாயிரத்து நூற்றியெண்பத்தொரு திருப்பாட்டுக்களே. இவற்றுள், சிலபதிகங்களில் பன்னிரு திருப்பாட்டுக்களும் சிலவற்றில் ஏழு பாட்டுக்களும் சிலவற்றில் எட்டும் சிலவற்றில் ஒன்பதும் சிலவற்றில் பத்தும் உள்ளன.


  1. திருமறைக்காட்டுத் திருப்பதியங்களில் “விடைத்தகர்” எனத் தொடங்குவது. இவ்வாறு திரு. செட்டியார் அவர்கள் கூறுதற்குச் சான்று ஒன்றும் தெரிந்திலது.