பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 -

10. சோழர் காலச் சைவ இலக்கியம்

சைவத்திருமுறைகள்

ைெசவத் திருமுறைகள் பன்னிரண்டில், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் பாடிய முதல் எட்டுத்திருமுறைகளும் 10-ஆம் திருமுறையாகிய திருமந்திரமும் பல்லவர் காலத்தவை. 11-ஆம் திருமுறையில் உள்ள காரைக்கால் அம்மையார், ஐயடிகள், சேரமான் பெருமாள், நக்கீரதேவர், பரணதேவர், கபிலதேவர், கல்லாடதேவர் ஆகியோர் இயற்றிய பாடல்களும் பல்லவர் காலத்தவை. அவை நீங்கலாகவுள்ள 11-ஆம் திருமுறைப் பாடல்களும் 9-ஆம் திருமுறையும் சேக்கிழார் இயற்றிய பெரிய புராணமாகிய 12-ஆம் திருமுறையும் சோழர்காலத்திற் செய்யப்பட்ட திருமுறைகளாகும்.

ஒன்பதாந்திருமுறையில் ஒன்பது அடியார்கள் பாடிய ப்ாடல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பாவும் திருவிசைப்பா எனப்படும். ஒன்பது அடியாராவார் - திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலி அமுதனார், புருஷோத்தம நம்பி, சேதிராயர் என்பர். (1) திருமாளிகைத் தேவர் திருவிடை மருதூர், மாளிகை மடத்தைச் சேர்ந்தவர். இவர் தில்லையைப் பற்றியே நான்கு திருவிசைப்பாக்கள் பாடியுள்ளார். (2) சேந்தனார் திருவீழிமிழலையில் வாழ்ந்தவர்; தில்லையில் இருந்தபோது தேர் ஓரிடத்தில் நின்றுவிட்டதைக்கண்டு திருப்பல்லாண்டு பாடி அதனைப் போகச் செய்தனர் என்பர். இவர், திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக்கழிமீது மூன்று திருவிசைப்பாக்களும், தில்லைமீது திருப்பல்லாண்டும் பாடியுள்ளார். தில்லையில், மூவாயிரவர் இருந்தாற்போலத் திருவீழிமிழலையில் ஐந்நூற்றுவர் இருந்தனர் என்று இவர் குறித்துள்ளார். (3) கருவூர்த் தேவர் முதலாம் இராசராசன் காலத்தவர்; தஞ்சைப் பெரிய கோவிலின் லிங்கத்தை ஆவுடையாரில் அசையாது பொருத்திய பெரியார். இவர் சமாதி அப்பெரிய கோயில் திருச்சுற்றில் இருக்கின்றது. இவர் தில்லை, திருக்களந்தை - ஆதித்தேசுவரம், கீழ்க்கோட்டுர் - மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கைகொண்ட சோழேச்சுரம், திருப்பூவணம்,