பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

101


நடையில் மொழி பெயர்த்தவர் பெருந்தேவனார் என்னும் சங்கப் புலவராவர். எனவே பாரதம் பாடிய பெருந்தேவனார் எனக் கருதுதல் பொருத்தமுடையதாகும். தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத்திணையியலுரையில் நச்சினார்க்கினியர் மேற்கோளாகக் காட்டியுள்ள பாரத நிகழ்ச்சி பற்றிய ஆசிரியப் பாக்கள்சங்கப் புலவர் பெருந்தேவனார் பாடிய பாரதத்தைச் சார்ந்தன எனக் கொள்ளுதல் பொருந்தும்.

இனி, கி.பி. எட்டாம் நூற்றாண்டினையொட்டி வாழ்ந்த பெருந்தேவனார் என்ற புலவர் வெண்பாவும் உரை நடையும் விரவிய நிலையில் பாரதக் கதையினைத் தமிழில் மொழிபெயர்த்தமைத்துள்ளார். பெயரொப்புமையாலும் பாரதத்தை மொழி பெயர்த்துப் பாடினமையாலும் இவரையும் பாரதம் பாடிய பெருந்தேவனார் என வழங்குதலுண்டு. பெயரொற்றுமை யொன்றே பற்றி இவ்விருவரையும் ஒருவரேயெனக் கொள்வாரு முளர். கடைச் சங்கப் புலவர் பெருந்தேவனார் பாடிய பாரதம் அகவல் நடையால் இயன்றது. பிற்காலத்தவராகிய பெருந்தேவனார் பாடிய பாரதம் வெண்பாவும் உரை நடையும் விரவியமைந்தது. எனவே காலத்தாலும் யாப்பாலும் வேறுபட்ட இருநூற்களின் ஆசிரியர்களையும் ஒருவரெனத் துணிந்து கூறுதற்கு இடமில்லையென்பது இங்கு உளங்கொளத்தகுவதாகும்.

சோழன் செங்கணான் திருப்போர்ப்புறத்துச் சேரமான் கனைக்காலிரும்பொறையொடு பொருது குடவாயிற் கோட்டத்துச் சிறைப்படுத்தியவன் என்பது, சேரமான் கனைக்காலிரும்பொறை பாடிய குழவி யிறப்பினும்’ என்னும் முதற் குறிப்புடைய புறப்பாடலின் அடிக்குறிப்பினாற் புலனாம். கனைக்காலிரும் பொறையைச் சிறையினின்றும் விடுவித்தற் பொருட்டுப் பொய்கையார் என்னும் புலவர் சோழன் செங்கணானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அவனது போர்க் களத்தைக் சிறப்பித்துக் களவழி நாற்பது என்ற பனுவலைப் பாடினார் என்ற செய்தி கலிங்கத்துப்பரணியில் இடம் பெற்றுளது. சோழன் செங்கணானுக்கு நல்லடி என்ற பெயருடைய