பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

257


உள்ள நெடுநல்வாடையும் ஆகிய இவ்விரண்டும் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என வழங்கும் ஒரு புலவராலேயே பாடப்பெற்றனவாக பண்டையோர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

கடைச்சங்க காலத்தவராகிய நல்லந்துவனாராகிய புலவர் பாடிய பாடல்கள் பரிபாடலிலும் கலித்தொகையிலும் ஏனைத் தொகைகள் சிலவற்றிலும் இடம் பெற்றுள்ளன. ஒருவர் பாடிய பாடல்களாகிய இவை பொருளமைதியிலும் மொழி நடையிலும் சிறிது சிறிது வேறுபடக் காண்கிறோம். செய்ய எடுத்துக்கொண்ட பொருள்வகை காரணமாக யாப்பியலும் மொழி நடையும் வேறுபடுதல் இயல்பேயாகும். இவ்வாறே பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்ற நெடுநல்வாடையும் முருகன்பால் முதுவாய் இர வலனை ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப் பெற்ற திருமுருகாற்றுப்படையும் எடுத்துக் கொண்ட பொருள் வகையால் சிறிது வேறுபட்டனவாதலின் அவற்றிடையே சிறிது சிறிது வேறுபாடு காணப்படுதல் ஏற்புடையதேயாகும். இடைச் சங்க நூலாகிய தொல் காப்பியத்தில் சுட்டப்படாத மொழி வழக்குகள் சில கடைச்சங்க நூல்களில் புதியன புகுதலாக ஆங்காங்கே உடன் பட்டு இருத்தலைக் காண்கிறோம். புதியன புகுதலாகிய இவ்வழக்கிற்குத் திருமுருகாற்றுப்படையும் விலக்கானதன்று.

திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரனாரும், நெடுநல்வாடை பாடிய நக்கீரனாரும் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார் என ஒருவராகவே குறிக்கப்படுதலானும், இவர்பாடிய இவ்விரு பாடல்களிலும், சங்கச் செய்யுட்கள் பிறவற்றிலும் சொல்வழக்குகள் ஒத்து நிற்றலாலும், பெரும் பேராசிரியர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தாம் பதிப்பித்த பத்துப்பாட்டு இரண்டாம் பதிப்பிலே பாடினோர் வரலாறு என்னும் தலைப்பில் நக்கீரனாரைக் குறித்து எழுதுங்கால் இத்தகைய ஒப்புமைப் பகுதிகளைத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளமையாலும் திருமுருகாற்றுப்படை ஆசிரியரும் நெடுநல்வாடை ஆசிரியரும் மதுரைக் கணக்காயர் மகனார். நக்கீரனாரும் ஒருவரே என்பது நன்கு துணியப்படும்.