பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

259


முருகப் பெருமானது திருவடிப் பேரின்பமாகிய வீடு பேற்றினை அடைய விரும்பித் தன்னை எதிர்ப்பட்ட முதுவாய் இரவலனை நோக்கித் தாம் பெற்ற பேரின்பத்தை உலகமக்கள் அனைவரும் பெறுதல் வேண்டும் என்னும் அருள் நோக்கம் உடையராய் முருகப் பெருமானது திருவருளால் அடைதற்கரிய பேரின்பத்தை எடுத்துக் கூறி அவ்விறைவன்பால் ஆற்றுப்படுத்தும் நிலையில் திருமுரு காற்றுப்படை என்னும் செந்தமிழ்ப் பனுவலைப் பாடியுள்ளார். முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள தெய்வத்திருப்பதிகளின் சிறப்பினையும் அங்கு மக்கள் பலரும் அன்பினால் ஒருங்குகூடி முருகப் பெருமானது பொருள் சேர் புகழ்த் திறங்களைப் போற்றி உய்திபெறும் நிலையில் ஆங்காங்கே நிகழும் வழிபாட்டு முறைகளையும் அன்பினால் நிகழ்த்தப்பெறும் அவ்வழிபாடுகளில் காண்டற்கரிய கடவுளாகிய இறைவன் பண்டைத்தன் மூவா இளநல முடையோனாகத் தோன்றிக் காட்சியளிக்கும் பெற்றி யினையும், முருகனது அருளை நிரம்பப்பெற்ற சான்றோர்கள் அம் முதல்வனதருளை நாடிவந்த இரவலனுக்கு அருள் செய்யும் பொருட்டு இறைவனைப் பணிந்து வேண்டும் வேண்டுகோளையும், அவர்தம் வேண்டுகோளைச் செவிமடுத்த இறைவன் முதுவாய் இரவலனுக்கு விழுமிய பெறலரும் பரிசிலாகிய வீடுபேற்றினை வழங்கியருளும் திறத்தினையும் விரித்துரைக்கும் முறையில் அமைந்தது திருமுருகாற்றுப்படையென்னும் இத் தெய்வப் பனுவலாகும்.

உலகத்துப் பல்லுயிர்களும் மகிழ நீலக் கடல்மேல் தோன்றும் காலை யிளங்கதிரவனைப் போன்று, நீலமயிலின் மேல் செம்மேனிப் பேரொளியினனாகத் திகழ்வோன் முருகப்பெருமான். தன்னைச் சேர்ந்தவர்களது ஆணவவல் லிருளைப் போக்கி அவரைத் தாங்கிய ஆற்றல்மிக்க திருவடியினையும் அழித்தற்கரிய கொடியோரை அழித்த கையினையும் உடையவன். அறக்கற்பினையுடைய தெய்வயானையார் கணவன். செங்கடம்பின் மாலையசையும் மார்பினையுடையவன். வண்டுகள் மொய்க்காத தெய்வத் தன்மை வாய்ந்த செங்காந்தட்பூவாலாகிய கண்ணியைச் சூடிய திருமுடியையுடையவன். கடல்நடுவிற் புகுந்து