பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

283


வாங்கிப் பகைவரை எறி என்று கனவிற் கூறி அதிற் பூவைத் தன் வேலாக நிருமித்த தொரு கதை கூறிற்று. இதனானே வேலூர் என்று பெயர் ஆயிற்று” என இத்தொடர்ப் பொருளை விளக்குவர் நச்சினார்க்கினியர். எனவே, இத் தொடரில் திறல்வேல் எனவும் விறல்வேல் எனவும் சுட்டப்பட்டது, முருகன் கையில் உள்ள வலியினை உடைத்தாகிய வேற்படையினை என்பது மேற்குறித்த உரைவிளக்கத்தால் உய்த்துணரப்படும். இதனால் வேல் என்பது போருக்குரிய படைக்கலம் என்றமையாது முருகன் கையிலுள்ள தெய்வத் தன்மை வாய்ந்த வேற்படையினைச் சிறப்பாகக் குறித்து வழங்கும் மரபு காணலாம். தமிழகத்துச் சிற்றுார்களில் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி நாச்சியாரைப் போற்றி ஆடும் வள்ளிக் கூத்தினை ஆண் பெண் இரு திறத்தாரும் நாடு வளம்பெற ஆடிப் போற்றுதலை மரபாகக் கொண்டனர். இச்செய்தி வாடா வள்ளி (தொல். புறம். சூத். 5) என வரும் தொல்காப்பியத் தொடராலும்,

"வாடா வள்ளியின் வளம்பலதரூஉம் நாடு”

(பெரும்பாண். 370-371)

என வரும் பெரும்பாணாற்றுப்படைத் தொடராலும் அறியப்படும். பேய்களாடும் துணங்கைக் கூத்தினையும் அழகினையுமுடைய வெற்றி வெல் போர்க் கொற்றவையாகிய இறைவி வெள்ளிய அலைகளையுடைய கடலிலே சென்று கடிய சூரனைக் கொன்ற முருகப் பெருமானைப் பெற்ற பெரிய வயிற்றினையுடையாள் எனச் சிறப்பித்துப் போற்றப் பெறுகின்றாள். குறிஞ்சிக் கிழவனாகிய முருகப் பெருமானைப் பாலை நிலத் தெய்வமாகிய கொற்றவைக்கு மைந்தனாகக் கொண்டு போற்றும் இவ்வுறவு முறை,

“வெற்றி வெல்போர்க்கொற்றவை சிறுவ”

எனவரும் திருமுருகாற்றுப்படைத் தொடரிலும்,

“வெண்டிரைப்பரப்பிற் கடுஞ்சூர் கொன்ற

பைம்பூட் சேஎய் பயந்த மாமோட்டுத்