பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

355


ஏறுபெற் றுதிர்வனபோல் வரைபிளந்து, இயங்குநர் ஆறுகெட விலங்கிய அழலவிர் வெஞ்சுரம்” (கலித்.1)

எனவரும் பாலைக்கலியாகும்.

‘இறைவன் உலகுகளைப் படைக்கக் கருதிய இடத்தே அப்படைத்தற்றொழிலைச் செய்தற்கு உரியனாய்த் தோன்றிய முதியவனாகிய பிரமன் முதலாகவுள்ள தேவர்கள் வந்து இரந்து வேண்டிக் கொண்டமையாலே, தமக்குரிய எல்லையளவில் அடங்கி நடவாத அவுனருடைய வலிமையைக் கெடுத்தற்கு கூற்றுவனைப் போன்று சினந்து, வஞ்சனையாளராகிய அவ்வவுனரை வஞ்சியாது எதிர்நின்று கொல்லும் வலியுடனே மூன்று கண்களையுடைய சிவபெருமான் முப்புரங்களையும் வெகுண்டுநோக்க, அவ்விறைவனுடைய முகம் பகைவரைத் தேறுமாறுபோல ஒளிதங்கிய கதிரவன் சுடுகையினாலே மலைகள் பிளவுபட்டுப் பிறராற் சீறுதற்கரிய மழுப்படையினையுடைய அம்முதல்வன் வெகுளுதலால் முப்புரங்களும் அழித்தலைப் பெற்றுப் பொடியாய் உதிர்வன போல, வழிபோவார்க்கு வழி யில்லாதபடி வீழ்ந்து குறுக்கிட்டுக் கிடந்த வெம்மை விளங்கும் அரிய வழியிடத்தே’ என்பது மேற்காட்டிய பாலைக்கலியின் பொருளாகும். இதன்கண் கதிரவனது வெப்பத்தால் வானுறவுயர்ந்த மலைகள் பிளந்து கொடியாய்ச் சிதர்ந்து கீழே கிடக்கும் தோற்றத்திற்கு, விசும்பிலே திரியும் இயல்பினவாகிய முப்புரங்களும் முக்கண்ணனாகிய இறைவனது வெகுளியாற் சுடப்பட்டுப் பொடியாகிச் சிதர்ந்து வீழ்ந்து கிடக்கும் தோற்றத்தினைப் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் புலவர் பெருமான் உவமையாக எடுத்துக்காட்டி விளக்கியுள்ளமை இப்புராணச் செய்தியின் தொன்மையைப் புலப்படுத்துவதாகும்.

தனக்கு மேலாகத் தொழப்படுந் தெய்வமில்லாத சிறப்பினையுடைய முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் திரிபுரத்தை எரித்த காலத்து இமயமலையாகிய வில்லின் நானாக அமைந்து புகழப்படும் தொல்புகழைத் தந்தது வாசுகியென்னும் பாம்பே என்பது,