பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

421


மக்களுக்கு நற்பயன்தரும் ஒழுக்கநெறியினை அறிவுறுத்தும் முறையினைத் திருவள்ளுவர் தம் நூலில் மேற் கொண்டுள்ளார். எனவே திருக்குறள் உலகப்பொதுமறை எனப் போற்றப்பெறுவதாயிற்று. உலகமக்கள் அனைவர்க்கும் பயன்படும் வகையில் பொதுநூலியற்றத் திருவுளங்கொண்ட திருவள்ளுவர், தாம் ஒரு நாட்டிற்கோ ஒரு மொழிக்கோ ஒரு சமயத்திற்கோ ஓரினத்திற்கோ உரியவர் என்ற நிலையில் தம்முடைய உள்ளத்தை ஒரு குறிப்பிட்ட சிறிய எல்லைக்குள் சுருக்கிக்கொள்ளாமல் 'யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றாங்கு உலகிற் பலதிறப்பட்ட கொள்கையாளர்களின் கருத்துக்களுக்கும் விரிந்து இடங்கொடுக்கும் விசும்புதோய் உள்ளத்தினராய், உலகத்தார் உள்ளியதெல்லாம் நுனித் துணர்ந்து அறிவுறுத்தும் முறையில் திருக்குறளை இயற்றியுள்ளார். இதுபற்றியே எல்லாப் பொருளும் இதன் பாலுள இதன்பால், இல்லாத எப்பொருளும் இல்லையால். (திருவள்ளுவமாலை) எனப் புலவர் பெருமக்கள் திருக்குறளைப் பாராட்டிப் போற்றியுள்ளார்கள்.

உலகப்பொது மறையாகத் திகழும் திருக்குறளில் தமிழ்நாட்டில் தொன்மைக் காலத்தே தோன்றி நிலைபெற்று வளர்ந்துள்ள சைவம் வைணவம் முதலிய தெய்வ வழிபாட்டு மரபுக்ளையும் தமிழர் கண்ட தத்துவவுண்மைகளையும் புலப்படுத்தும் குறிப்புக்களும் வடநாட்டில் தோன்றியனவாய் இடைக்காலத்தே தமிழகத்தில் வந்து பரவிய வைதிகம் சமணம் பெளத்தம் முதலிய சமயங்களுக்குரிய கருத்துக் களையும் கொள்கைகளையும் புலப்படுத்தும் குறிப்புக்களும் இடம் பெற்றிருத்தல் காணலாம். பன்னெடுங்காலமாகத் தமிழகத்தில் வாழும் சைவர் வைணவர் சமணர் பெளத்தர் முதலிய பல சமயச் சான்றோர்களும் திருவள்ளுவர் அருளிய திருக்குறளைத் தத்தம் சமயத்திற்கு அரண்செய்யும் பொதுமறையாகவே மதித்துப் போற்றி வந்துள்ளார்கள். இச்செய்தி இதுவரை தமிழ்நாட்டில் தமிழ்மொழியில் தோன்றி வழங்கும் பல்வேறு சமய நூல்களால் நன்கு புலனாகும்.

இவ்வாறு திருக்குறளானது பல்வேறு சமயத்தவ ராலும் பல்வேறினத்தவர்களாலும் மதித்துப் போற்றப்பெறும்