பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


திருக்குறளில் வலியுறுத்தப் பெற்றுள்ளமை கூர்ந்துணரத் தகுவதாகும்.

அவாவினை முற்ற அறுத்தவனுக்குச் செய்தன வெல்லாம் தவமாம். அவா இல்லாதார்க்கு வரக்கடவதொரு துன்பமுமில்லை. அவாவே துன்பத்திற்குக் காரணமாகும். அவா என்று சொல்லப்படுகின்ற மிக்க துன்பம் ஒருவர்க்குக் கெடுமாயின் அவர் வீடுபெற்ற பின்னர் என்பதின்றி இவ்வுலகத்து உடம்பொடு கூடிநின்ற நிலையிலும் இன்பம் இடையறாது என்பார்,

“இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துட்டுன்பங்கெடின்” (திருக். 369)

என்றார் திருவள்ளுவர். "அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் ஈண்டும் இன்பம் இடையறாது என இயைத்துப் பொருள் கொள்வர் பரிமேலழகர், துன்பத்துள் துன்பமாவது வாழ்க்கையில் நேரும் பிறதுன்பங்களெல்லாம் இன்பம் என்று எண்ணுமாறு வரும் மிக்க துன்பம். ஈண்டு - இவ்வுலகத்து உடம்பொடு கூடியுள்ள நிலையிலும், அவாவறுத்தார்க்கு மனமானது உலகப்பொருள் மேற் சிறிதும் பற்றின்மையால் தடுமாற்றமின்றி நிறைவு பெற்று நிற்றலால் இடையறாத இன்ப நிலையினையுடையதாயிற்று என்பார். இன்பம் இடையறாது’ என்றார். அவாவறுத்தார் இவ்வுலகில் உடம்பொடு கூடிவாழும் நிலையிலேயே மெய்ப் பொருளாகும் இறையொடு கலந்து வீடுபேற்றின்பத்தினை நுகர்வர் என்னும் சைவசித்தாந்தக் கொள்கைக்கு இத்திருக்குறள் அரண்ச்ெய்தல் அறியத்தகுவதாகும்.

நம்மிடத்து உள்ளது போதும் எனும் மன நிறைவினைத் தராத இயல்பினதாகிய அவாவினை ஒருவர் அறவே நீக்குவராயின் அத்தகைய நீத்தல், அவர்க்கு அப்பொழுதே எக்காலத்தும் திரிபின்றி ஒரு நிலையராம் வீடுபேற்றியல்பினைக் கொடுக்கும் என்பார்,

"ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்” (திருக். 370)