பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


கரையில் ஒரு பொழிலகத்தே தங்கிய சமண சமயத் தவச் செல்வியாகிய கவுந்தியடிகளைக் கண்டு வணங்கி இவ்வம்மையார் கூறிய முறையிலே எவ்வுயிர்க்கும் தீங்கு நிகழாதபடியும், சமண சமய ஒழுக்கம் சிதையாதபடியும் அவ்வம்மையாரைத் துணையாகக் கொண்டு மதுரைக்குச் சென்றானென்றும், செல்லும் வழியில் கவுந்தியடிகள் உறையூரில் அருகனைத் துதித்து வழிபட்டாரென்றும் அங்கு வான்வழியே வந்த சாரணர் கவுந்திக்கு ஊழ்வினைத் திறத்தை யறிவுறுத்தினார்கள் என்றும், மதுரை நகரத்தே கோவலன் ஊழ்வினையால் கொல்லப்பட்டு இறந்த காலத்துக் கவுந்தி யடிகள் உண்ணாநோன்போடு உயிர் துறந்தாரென்றும் அடிகள் விரித்துரைத்துள்ளார்.

சமணமும், புத்தமும் தமிழ்நாட்டில் தோன்றிய மதங்களல்ல. வைதிக நெறியிற் காணப்பட்ட வழுக்களை நீக்குதற்பொருட்டு வடநாட்டில் தோன்றிய இவ்விரு சமயங்களும் கடைச்சங்க காலத்தின் பிற்பகுதியிலே தமிழ் நாட்டிற் பரவத் தொடங்கின. பத்துப்பாட்டில் மதுரைக் காஞ்சியில்தான் முதன் முதலாகச் சமண் சமயத்தைப் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. அதனை யடுத்துச் சமண சமயத்தைப் பற்றி விரிவாகக் கூறுவது இச்சிலப்பதிகாரந்தான். எனவே, இந்நூல் தோன்றிய காலத்துச் சமண சமயம் சோழநாட்டிலும் பாண்டி நாட்டிலும் நிலைபெறத் தொடங்கிய முறையினையும் அச்சமயத்தார் மக்களிடையே பரப்பிய அருளற நெறியாகிய சீவகாருண்ணிய ஒழுக்கம் ஊழ்வினை யுருவெடுத்து ஊட்டும் முறையாகிய அவர்தம் சமய உண்மைகளையும் கவுந்தியடிகள் வாழ்க்கை முறையிலும் கோவலன் கண்ணகி வாழ்க்கை முறைகளிலும் வைத்து இளங்கோவடிகள் உணர்த்துதலை நோக்குங்கால் அடிகள் சமண சமயச் சீலங்களிலே கொண்டுள்ள பெருமதிப்பு நன்கு விளங்கும். சமண சமயம் பற்றிய கருத்துக்களை விரித்துரைத்தாற் போலப் புத்த சமயக் கருத்துக்களைச் சிலப்பதிகாரம் விரித்துரையாமையை நினைக்குங்கால் இளங்கோவடிகள் காலத்துப் புத்த சமயம் தமிழகத்தில் நன்றாக வேரூன்றவில்லையென்ப து விளங்கும்.