பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

சொன்னால் நம்பமாட்டீர்கள்


நாங்கள் போன நேரத்திலும் வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தார். எங்களைக் கண்டதும் ஏக உப்சாரம் செய்து வரவேற்றார்.

நாங்கள் தேர்தல் தோல்வி பற்றி பேசி ஒருவருக்கொருவர் தைரியமூட்டிக் கொண்டிருந்தோம். நாங்கள் புறப்படலாமென்று நினைத்தபோது, திரு. நாயுடு அவர்கள், அங்கிருந்த ஒரு பையனைப் பார்த்து, “டேய், போய் இரண்டு அல்வா, இரண்டு வடை, இரண்டு காபி சீக்கிரம் வாங்கிக் கொண்டு வா” என்று உத்தரவிட்டார். பையன் போன வேகத்தில் சொன்னவைகளை வாங்கி வந்து திரு. நாயுடு அவர்கள் முன்னிலையில் வைத்தான்.

அச்சமயம் நாயுடு அவர்கள் தேர்தலில் துரோகம் செய்தவர்களைப் பற்றி ரொம்ப ஆக்ரோஷமாகப் பேசிக் கொண்டிருந்தவர், அல்வா பொட்டலத்தை அவிழ்தது அல்வாத் துண்டைக் கையிலெடுத்து, “நாம் எவ்வளவு உண்மையாக இருந்தாலும் முஸ்லிம்கள் நம்மை நம்பவில்லை” என்று கோபமாகச் சொல்லி தன்னை மறந்து மேற்படி அல்வாத் துண்டை வாயில் போட்டுக் கொண்டார். அதன் பிறகு ஹரிஜனங் களைப்பற்றி கோபமாகப் பேசி இன்னொரு அல்வாத்துண்டையும் தின்றுவிட்டார்.

உடனே நான் பொய்க்கோபமாக “தலைவர் சார், எங்களுக்கு வாங்கி வந்த இரண்டு அல்வாத் துண்டையும் நீங்களே தின்றுவிட்டீர்கள். இந்த ஊரில் எங்களுக்கு ஓட்டு இருந்தால் நாங்கள் கூட உங்களுக்கு ஒட்டுப்போட மாட்டோம். ஆகவே நீங்கள் தோற்றது ரொம்ப நியாயம்” என்றேன்.

அப்போதுதான் திரு. நாயுடு அவர்கள் தன்நிலைக்கு வந்து, “அடடா” என்று வருந்தினார்.

“பின்னர் விடாப்பிடியாக அன்று இரவு சாப்பிட்டுத்தான் போகவேண்டும் என்று வற்புறுத்தி தடபுடலானவிருந்து செய்து கெளரவித்தார்.”