பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

47


பேசிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று குன்றின் உச்சியில் தாடகை பயங்கரமான உருவத்தில் தோன்றினாள். குன்றின் சரிவில் இறங்கி நின்று கொண்டு அவள் ஒரு சூலாயுதத்தை எடுத்து எங்கள் மேல் வேகமாக வீசினாள்.

ராமன் ஒரு அம்பை எய்து அந்தச் சூலாயுதத்தைச் சுக்குச் சுக்காக ஆக்கிவிட்டான். பிறகு பெரிய அம்பு ஒன்றை எடுத்து எய்தான். அது என்ன செய்தது? தன் கண்களில் கொல்லுலை போல அக்கினியைக் கொப்புளித்துக்கொண்டிருந்த தாடகையின் மார்பை ஊடுருவிப் போயிற்று.

அலை அலையாக மோதிக் கொண்டிருக்கும் நீலக்கடல் போல் சக்தியும் அற்புதமும் வாய்ந்தவனாய் இருக்கிறான் ராமன். ஜனகனைப் பார்த்து விசுவாமித்திரர் பேசுகிறபேச்சு. இப்போது பாட்டைப் பார்க்கலாம்.

“அலையுருவக் கடல் உருவத்(து)
ஆண்டகை தன் நீண்டுயர்ந்த நிலையுருவப் புயவலியை
நீ யுருவ நோக்கையா
உலையுருவக் கனல் உமிழ்கண்
தாடகை தன் உரம் உருவி-”

தாடகையின் மார்பை உருவிவிட்டு வேறு என்ன செய்தது அந்த அம்பு? அவளுக்குப்பின்னிருந்த மலையை உருவியது. பிறகு மலைக்குப் பின் பக்கத்தின் சரிவில் வளர்ந்து ஓங்கி நின்ற மரம் ஒன்றையும் உருவியது. தன் காரியங்களை இப்படியாக முடித்துக்கொண்டு அந்த அம்பு கடைசியில் மண்ணுக்குள் பாய்ந்தது. செய்யுள் முழுமையும் பார்ப்போம்: