பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

77



உடனே பதறிப் போய் தேவகோட்டையில் இருந்து ஒரு நண்பர் காசிக்கு நேராகப் புறப்பட்டு வந்து என்னிடம் விவரத்தைச் சொன்னார்.

என்னால் எனது உறவினர்களும், தாய் தந்தையர்களும் பட்ட சிரமங்களை எண்ணி மிகவும் மனம் வருந்தினேன். நாம் செய்த காரியத்திற்குத் தண்டனையை மற்றவர்கள் அனுபவிப்பது தவறு என்று எனக்குத் தோன்றியது. ஆங்கில அரசாங்கம் என்ன தண்டனை கொடுத்தாலும் பெற்றுக்கொள்வது, உறவினர்களையும் தாய் தந்தையர்களையும் காப்பாற்றுவது என்ற முடிவுக்கு வந்தேன்.

ஆகவே ஒரு நிமிடம் கூட காசியில் தாமதியாமல் அங்கு இருந்து நேராகப் புறப்பட்டு என்னைக் கூப்பிட வந்த நண்பருடன் தேவகோட்டை வந்து சேர்ந்தேன்.

தேவகோட்டையில் என்னை ஒரு வீட்டில் தலைமறைவாகக் கொண்டு போய்வைத்தார்கள். இரவு 8 மணிக்குமேல் எனது நெருங்கிய உறவினர்களில் பலரும் ஊரின் முக்கிய பிரமுகர்களும், நான் தலைமறைவாக இருந்த வீட்டிற்கு வந்தார்கள்.

என் தாயார் என்னைப் பார்த்ததும் கதறி அழுதார்கள். எல்லோருமாகக் கூடி மறுநாள் காலையில் என்னைப் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைப்பது என்று முடிவு செய்தார்கள்.

அப்போது ஊரின் முக்கிய பிரமுகர் ஒருவர் “ஸ்டேஷனில் கொண்டு போய் ஒப்படைக்கும்போது தம்பி கதர் கட்டாமல் மில் துணியை அணிந்து கொண்டு வந்தால் நல்லது. கதரைக் கண்டால் இன்ஸ்பெக்டருக்கு கோபம் வரும்.