பக்கம்:சோழர் வரலாறு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

சோழர் வரலாறு



புகுமாறு விரட்டினான்; வீர பாண்டியற்குத் துணையாக வந்த இலங்கைப் படைகளைத் தாங்கிக் கொண்டே இலங்கைக்கும் சென்றான்; அங்குக் கடும்போர் செய்து, போர்க்களத்தில் கி.பி.959 -இல் மடிந்தான்.[1]

வீரபாண்டியனை எதிர்த்த ஆதித்த கரிகாலனுக்கு உறுதுணையாக இருந்தவர் சிலர். அவருள் முற்கூறிய வேளார். ஒருவன். ‘பூதி விக்கிரம கேசரி’ என்னும் கொடும்பாளுர்ச் சிற்றரசன் மற்றொருவன். இவனுக்குக் கற்றளிப் பிராட்டியார், வரகுணப் பெருமானார் என்னும் மனைவியர் இருந்தனர். இவருள் பின்னவர் சோழ அரசன் (ஆதித்தன்?) உடன் பிறந்தவர் என்று கல்வெட்டு கூறுகிறது. இவனுடைய மக்கள் இருவர்க்கும் ‘பராந்தகன், ஆதித்தவர்மன்’ என்னும் பெயர்கள் இடம்பெற்றிருந்ததையும் நோக்க, சோழ மன்னர் கொடும்பாளுர்ச் சிற்றரசரிடம் பெண் கொடுத்தும் கொண்டும் வந்தனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்கமாதல் காண்க.

விக்கிரமகேசரி பல்லவனை வென்றதாகக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. அச்சொல் வல்லபன் (இராட்டிரகூட அரசன்) என்றிருத்தல் வேண்டும் என்று அறிஞர் அறைவர். இரண்டாம் பராந்தகன் தன் தந்தை, பெரிய தாதை இவர்களைப் பின்பற்றித் தொண்டை நாட்டைக் கைப்படுத்த முயன்றான். அம்முயற்சியில் விக்கிரம கேசரியும் ஈடுபட்டானாதல் வேண்டும். இப்பராந்தகன், ஆதித்த கரிகாலன் இவர்தம் கல்வெட்டுகள் தொண்டை நாட்டில் மிகுதியாகக் கிடைப்பதையும், மூன்றாம் கிருஷ்ணனுடைய கல்வெட்டுகள் குறைந்து காணப் படலையும் நோக்க, முதற்பராந்தகன் இறுதிக் காலத்தில் இழந்த தொண்டை மண்டலம் அவன் மரபினனது இடைவிடா முயற்சியால் சிறிது சிறிதாகக் கைப்பற்றப் பட்டு வந்தது என்பது தெரிகிறது.


  1. 302 of 1908.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/176&oldid=491192" இலிருந்து மீள்விக்கப்பட்டது