பக்கம்:சோழர் வரலாறு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

185



கோட்டங்களின் வடபகுதியும் சேர்ந்திருந்தது.[1] இந்நிலப் பகுதி இராசராசன் பேரரசிற் கலந்துவிட்ட பிறகு, நுளம்பப் பல்லவர் சிற்றரசராகவும் சோழ அரசியல் அலுவலாளராகவும் இருக்கலாயினர். ஐயப்பன் மகனான கன்னராசன் என்பவன் தடிகைபாடியின் ஒரு பகுதியை இராசராசற்கு அடங்கிய சிற்றரசனாக இருந்து ஆண்டு வந்தான் : ‘நொளம்பாதி ராசன்’ என்பவன் இராச ராசன் தானைத் தலைவனாக இருந்தான். ‘நொளம்பாதி ராசன் சொரபையன்’ என்னும் சிற்றரசன் ஒருவன் இருந்தான்.

தெலுங்க நாடு : தொண்டை நாட்டிற்கு வடக்கே கீழைச்சாளுக்கியர் ஆட்சி நெல்லூர் வரை பரவியிருந்தது. கிருஷ்ணையாறு முதல் வடபெண்ணையாறு வரை இருந்த நாடு சீட்புலிநாடு, பாகிநாடு என்று பெயர் பெற்றிருந்தது. இராசராசன் காருகுடியைச் சேர்ந்த பரமன் மழபாடியார் என்னும் மும்முடிச்சோழன் என்ற சேனைத் தலைவனைப் பெரும்படையோடு அங்கு அனுப்பினன். அத்தலைவன் பீமன் என்னும் அரசனை வென்று அந்நாடுகளைச் சோழப் பேரரசில் சேர்த்தான் மந்தை மந்தையாக ஆடுகளையும் பிற பொருள்களையும் கைக் கொண்டு மீண்டான் என்று காஞ்சிபுரக் கல்வெட்டொன்று கூறுகிறது.[2] நெல்லூர்க் கோட்டத்தைச் சேர்ந்த ரெட்டி பாளையத்துக் கல்வெட்டில் இராசராசனது 8ஆம் ஆட்சி ஆண்டைக் குறிப்பிட்டு அவனது சிற்றரசன் அல்லது அரசியல் அலுவலாளனான மும்முடி வைதும்ப மகாராசன் ஆன துரை அரசன் என்பவன் தானம் செய்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.[3]

கீழைச் சாளுக்கிய நாடு : இராசராசன் காலத்தில் கீழைச் சாளுக்கிய நாடு பெருங்குழப்பத்தில் இருந்தது. அந்நாடு கிருஷ்ணை, கோதாவரியாறுகட்கு இடைப்பட்டது.


  1. Ep. Ind. VII. 10, p.87.
  2. 79 of 1921.
  3. Nellore Ins. No 239.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/187&oldid=482849" இலிருந்து மீள்விக்கப்பட்டது