பக்கம்:சோழர் வரலாறு.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

சோழர் வரலாறு



விமானம்: இது தஞ்சைப் பெரிய கோவில் விமானத்தைப் போன்றது. இதன் உயரம் 50 மீ. இது 30 மீ. சதுரமாக அமைந்துள்ளது; ஒன்பது அடுக்குகளை உடையது. இவற்றுள் முதல் இரண்டு அடுக்குகள் ஒன்றன்மேல் ஒன்றாக நிமிர்ந்து நிற்கின்றன. மற்றவை மேலே செல்லச் செல்ல சிறுத்துச் சரிவாக அமைந்துள்ளன; விமானத்தின் நாற்புறங்களிலும் வாயில்களும் மாடங்களும் இருக்கின்றன. விமானம் முழுவதும் அழகிய பதுமைகள் காட்சி அளிக்கின்றன. விமான உச்சியில் பெரிய கோவில் விமானத்தில் உள்ளதைப் போலவே ஒரே கல்லாலான சிகரம் ஒன்று இருக்கிறது. அதன் கலசம் இப்பொழுது இல்லை.

சிவலிங்கம் : தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள சிவலிங்கத்தைப்போலவே இது பெரியது. இஃது ஒரே கல்லால் ஆனது. இஃது இடி விழுந்து இப்பொழுது இரண்டாகப் பிளந்துள்ளது என்பது கூறப்படுகிறது. இச் சிவலிங்கப் பெருமானைப் பெரிய கோவிற்பெருமானைப் பாடிய கருவூர்த் தேவர் ஒரு பதிகத்தாற் சிறப்பித்துள்ளார். அஃது ஒன்பதாம் திருமுறையிற் சேர்க்கப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில் கீழணைக்கட்டுக் கட்டிய பொழுது இக்கோவிற்பகுதிகளும் திருச்சுற்றுகளும் தகர்த்துக்கொண்டு போகப்பட்டனவாம். எளிய சிற்றுாரார் தடுத்தனர். பயன் என்ன? தடுத்தவர் தண்டிக்கப்பட்டனர்.இடித்த கற்சுவருக்குப் பதிலாகச் செங்கற் சுவர் வைப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாம்.ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை[1].

இன்றைய காட்சி

திருமதில் : நீளம் ஏறத்தாழ 200 மீ அகலம் 150 மீ; கனம் 1 மீ. முழுவதும் கற்களால் இயன்றதே ஆகும். அத்திரு மதிலை அடுத்து இரண்டு அடுக்குத் திருச்சுற்று மாளிகை இருந்தது. இன்று ஒரு பகுதி மட்டுமே காணக்கிடக்கிறது.


  1. Ind. Ant. Vol. in p.274; K.A.N. Sastry’s ‘Cholas’, p.289.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/230&oldid=491318" இலிருந்து மீள்விக்கப்பட்டது