பக்கம்:சோழர் வரலாறு.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

சோழர் வரலாறு



இராசேந்திரன் காலத்தில் சிறப்புற்று இருந்தது. அது முன்சொன்ன ஸ்ரீ விசய நாட்டு அரசனான சைலேந்திர மரபைச் சேர்ந்த மாரவிசயோத்துங்கவர்மன் கட்டிய தாகும். அவன் நாட்டுப் பெளத்தர் நாகையில் தொழுவதற்கென்றே அது கட்டப்பட்டது. அவன் வேண்டுகோட்கிசைந்து இராச ராசன் இடம் தந்து ஆதரித்தான். அஃது இராசேந்திரன் காலத்திற்றான் கட்டி முடிக்கப்பட்டது. ஸ்ரீ விசயநாட்டு அரசன் அக்கோவிலுக்குத் தன் தந்தை பெயரை இட்டான். அதன் பெயர் ‘சூடாமணி வர்ம விஹாரம்’ என்பது. அதற்கு 'ஆனை மங்கலம்’ என்னும் கிராமம் தானமாக (பள்ளிச்சந்தம்) விடப்பட்டது. அத் தானப் பட்டயமே ‘லீடன் பட்டயம்’. எனப்படுவது. ‘லிடன்’ என்பது ஹாலந்து நாட்டில் உள்ள நகரம். ஆனைமங்கலப் பட்டயம் அங்கு எடுத்துச் செல்லப்பட்டது; அதனால் இப்பெயர் பெற்றது.

சீனர் உறவு : முன்னர் இராசராசன் சீனத்துக்குத் தூதுக் குழுவைப் பரிசிற் பொருள்களோடு அனுப்பினாற் போலவே, இராசேந்திரன் கி.பி. 1033-இல் தூதுக் குழு ஒன்றைச் சீன அரசனிடம் அனுப்பினான். சீன அரசன் அவர்களை வரவேற்று வேண்டியன செய்தான் என்று சீன நூல்கள் கூறுகின்றன. இந்த உறவால் சோழநாடு சீனத்துடன் கடல் வாணிகம் சிறக்க நடத்திவந்தது என்பதை நன்குணரலாம்.

நாட்டுப் பிரிவுகள் : இராசேந்திரன் காலத்தில் தொண்டை நாடு - சயங்கொண்ட சோழமண்டலம் என்றும், பாண்டி நாடு இராசராசப் பாண்டி மண்டலம் என்றும், இலங்கை - மும்முடிச் சோழ மண்டலம் என்றும், கங்கபாடி - முடிகொண்ட சோழ மண்டலம் என்றும், நுளம்பபாடி - நிகரிலி சோழ மண்டலம் என்றும் பெயர் பெற்றன. சோழ மண்டலம், மலைமண்டலம், கொங்கு மண்டலம், வேங்கி மண்டலம் என்பன பண்டைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/240&oldid=1233376" இலிருந்து மீள்விக்கப்பட்டது