பக்கம்:சோழர் வரலாறு.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

சோழர் வரலாறு



போலத் தன் பெருநாட்டைச் சுற்றிப் பார்ப்பதில் ஊக்கமுடையவனாக இருந்தான். கங்கைகொண்ட சோழபுரமே அரசனது கோ நகரம் ஆயினும், பழையாறை முதலிய இடங்களில் இருந்த அரண்மனைகளிலும் அரசன் இருந்து கட்டளைகளைப் பிறப்பித்தல் உண்டு. கி.பி.1122-இல் விக்கிரமன் முடிகொண்ட சோழபுரத்து (பழையாறை) அரண்மனையில் காணப்பட்டான்[1]; அடுத்த ஆண்டு செங்கற்பட்டுக் கோட்டத்துக் குனிவளநல்லூரில் இருந்து குளக்கரை மண்டபத்தில் காணப்பட்டான்[2]. இம்மண்டபம், இக்காலப் ‘பிரயாணிகள் விடுதி’ (Travellers Bangalow) போன்றது போலும் அரசன் கி.பி.1124-இல் தென்னார்க்காடு கோட்டத்து வீர நாராயணர் சதுர்வேதிமங்கலத்தில் (காட்டு மன்னார் கோவில்) இருந்த அரண்மனையில் காணப்பட்டான்[3]. கி.பி. 1120-இல் தில்லை நகரில் இருந்த அரண்மனையில் தங்கி இருந்தான்[4]. இக் குறிப்புகளால், இப்பேரரசன்,தன் ஆட்சிமுறையை நன்கு கவனித்துவந்தான் என்பது புலனாகிறதன்றோ?

சிற்றரசர் : கல்வெட்டுகளில் சிற்றரசர் சிலர் குறிப்பிடப் பட்டுளர். விக்கிரம சோழன் உலாவிலும் சிலர் குறிக்கப் பட்டுளர். முதல் கல்வெட்டில் குறிக்கப்பட்டாரைக் காண்போம். குலோத்துங்கன்பால் பெருஞ்சிறப்புப் பெற்ற நரலோக வீரனின் மகன் ஆன சூரை நாயகன் ஒருவன்[5]. வட ஆர்க்காடு கோட்டத்தின் பெரும் பகுதியை ஆண்ட சம்புவராயன் ஒருவன். அவன் செங்கேணி நாலாயிரவன் அம்மையப்பன் ஆன இராசேந்திர சோழ சாம்புவராயன்’ என்பது. அவன்மனைவி கி.பி. 1123-இல் திருவல்லம் மடத்திற்குச் சில தானங்கள் செய்துள்ளாள்[6]. வழக்கம் போலக் கோவலூரை ஆண்ட சேதிராயர் சிற்றரசராகவே


  1. 168 of 1906
  2. 229 of 1910
  3. 63 of 1918
  4. 163 of 1902
  5. 128 of 1930
  6. 322 of 1921
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/282&oldid=493009" இலிருந்து மீள்விக்கப்பட்டது