பக்கம்:சோழர் வரலாறு.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

307




பாண்டி நாட்டுப் போர் : இவ்வரசன் கல்வெட்டுகளில் தென்னாட்டுப் போரே சிறந்து காணப்படுகிறது. இவன் (1) மதுரை கொண்டது, (2) பாண்டியன் முடித்தலை கொண்டது, (3) ஈழநாடு கொண்டது, (4) கருவூர் கொண்டது, (5) கச்சி கொண்டது, (6) மதுரையில் வீராபிடேகமும் விசயாபிடேகமும் செய்துகொண்டமை ஆகிய செயல்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஆதலின், இவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.

மதுரை கொண்டது : அண்ணன் பல்லவராயனிடம் தோற்றோடிய குலசேகர பாண்டியன் இறந்தான். அப்பொழுது மதுரையை ஆண்டு வந்தவன் வீரபாண்டி யன். குலசேகரன் மகனான விக்கிரம பாண்டியன் மூன்றாம் குலோத்துங்கனை அடைக்கலம் புகுந்தான்.[1] இரண்டாம் இராசாதிராசனால் துரத்தப்பெற்ற குலசேகரன் மகனை அவனுக்குப் பின் வந்த குலோத்துங்கன் ஏன் சேர்த்துக் கொண்டான்? ஒன்று, வீரபாண்டியன் சோழனுக்கு எதிராக, இலங்கை அரசனுடன் நட்புக் கொண்டிருத்தல் வேண்டும்; அல்லது சோழனுக்கு மாறாக வேறு துறையில் நடந்திருத்தல் வேண்டும்; அல்லது வீரபாண்டியன் பாண்டிய அரசு பெறத் தகாதவனாக இருத்தல் வேண்டும். காரணம் யாதாயினும் ஆகுக. குலோத்துங்கற்கும் வீரபாண்டியற்கும் உதவியாக வந்த சிங்களவர் மூக்கறுப்புண்டு இறந்தவர் போக எஞ்சியவர் கடல் வழியே இலங்கை நோக்கி ஓடினர். இங்ஙனம் முதற்போர் குலோத்துங்கற்கு வெற்றி அளித்தது. சோழன் மதுரையும் அரசும் கொண்டு வெற்றித் தூண் நாட்டினன், மதுரையும் அரசும் விக்கிரம பாண்டியற்கு அருளி மீண்டனன்.[2]

முடித்தலை கொண்டது : தோற்று ஒடிய வீரபாண்டியன்


  1. S.I.I, Vol.3, No.86.
  2. 94 of 1918; S.I.I. Vol.3, p.212
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/309&oldid=1234282" இலிருந்து மீள்விக்கப்பட்டது