பக்கம்:சோழர் வரலாறு.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326

சோழர் வரலாறு



24-ஆம் ஆண்டுக் கல்வெட்டுக் குறிக்கிறது. [1]இக்கல்வெட்டுச் செய்தியால், இவன் சிவபெருமானிடம் கொண்டிருந்த பற்று நன்கு விளங்குகின்றதன்றோ?

ஞான குரு : இராசராசன் முதலியோர்க்கு ஞானகுரு இருந்தாற் போலவே இவனுக்கும் ஞானகுரு ஒருவர் இருந்தார். இவர் ஈசுவர சிவன் என்பவர். இவர் ஒரு சைவப் பெரியார். இவர் லாட நாட்டவர்; சாண்டில்ய கோத்திரத்தார்; ‘கண்ட சம்பு’ என்பவர் மகனார். இவரே திரிபுவனம் என்னும் பதியில் உள்ள சிவன் கோவிலைப் பிரதிட்டை செய்தவர் ஆவர்.

சுவாமி தேவர் : இவர் சைவ மடத்துத் தலைவர். இவர் தம் தவச் சிறப்பால் ஈழப்படைகளைத் தோல்வியுறுமாறு செய்தவர் என்று சிற்றரசன் கல்வெட்டொன்று கூறுகிறது. இவர் பிரதிட்டித்த அச்சுதமங்கலம் சிவன் கோவிலுக்குக் குலோத்துங்கன் இறையிலி அளித்துள்ளான். இவன் திருக்கடவூரில் இச்சோழன் விதித்திருந்த சில ஒழுக்கங்களை மாற்றி அமைத்தான்.[2] அம்மாற்றத்தை அரசனும் ஏற்றான் என்பதிலிருந்து அரசன் இவர் மாட்டுக்கொண்டிருந்த அளப்பரிய மதிப்புத் தெற்றெனத் தெரிகிறதன்றோ?

பிற மடங்கள் : ‘மாவிரதிகள்’ எனப்பட்ட காளாமுகரது ‘கோமடம்’ என்பது திருவானைக்காவில் இருந்தது. ‘சதுரானன பண்டித மடம்’ என்பது திருவொற்றியூரில் இருந்தது. ‘வாரணாசி பிக்ஷா மடம்’ என்பது பந்தணைநல்லூரில் இருந்தது. ‘வாரணாசிலக்ஷாத்யாய இராவாளரது கொல்லா மடம்’ என்பது திருப்பாசூரில் இருந்தது. இவை அனைத்தும் சைவ ஆசாரிய பீடங்களாகக் குலோத்துங்கன் ஆட்சியில் திகழ்ந்தன.[3]


  1. M.E.R. 554 of 1904.
  2. M.E.R. 40 of 1906; 393, 395 of 1920
  3. M.E. R. 357 of 1911, 72 of 1931, III. of 1930.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/328&oldid=1234299" இலிருந்து மீள்விக்கப்பட்டது