பக்கம்:சோழர் வரலாறு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

35



திருமறைக்காடு, திருநள்ளாறு, திருவாய்மூர் ஆகிய ஏழு திருப்பதிகளிலும் எழுந்தருளச் செய்தான். ஆதலின் இந்த ஏழு பதிகளும் ‘சப்த விடங்கத் தலம்’ எனப்படுகின்றன.

நாளங்காடிப் பூதம்

இந்திரன் முசுகுந்தனுக்கு மெய்க்காவலாகுமாறு வலிய பூதம் ஒன்றை அனுப்பினான். அது பூம்புகார் நகரம் சென்று, மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்ற இரு பகுதிகட்கும் இருந்த நாள் அங்காடியில் (பகற்காலக் கடைத் தெரு) இருந்து, தன் பணியைச் செய்து வந்தது.[1] அப்பூதம், புகார் நகரில் இந்திர விழாச் செய்யப்படா தொழியின் வெகுண்டு துன்பம் விளைவிக்கும் என்பது மணிமேகலை காலத்து மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையாகும்.[2] இவனைக் குறிக்கும் தமிழ் நூல்கள்

முசுகுந்தன் சிலப்பதிகாரம், மணிமேகலை, கலிங்கத்துப்பரணி, கந்தபுராணம், ஒரு துறைக்கோவை முதலியவற்றில் குறிக்கப்பட்டுள்ளான். இக்குறிப்புகளில் சிறப்பாக அறியத்தக்கது - முசுகுந்தன் காலத்திலே காவிரிப்பூம் பட்டினம் நன்னிலையில் இருந்தது என்பதே ஆகும். இத்துடன், ‘கி.மு. 6 அல்லது 7-ஆம் நூற்றாண்டு முதலே தென் இந்தியா மேனாடுகளுடன் சிறக்க வாணிபம் நடத்தி வந்தது’[3] என்று மேனாட்டு ஆராய்ச்சியாளர் கூறும் கூற்றை ஒத்திட்டுப் பார்த்தல் இன்பம் பயப்பதாகும்.


  1. சிலப்பதிகாரம் - கடலாடு காதை.
  2. மணிமேகலை விழாவறை காதை.
  3. Kennedy's conclusion that maritime trade between South India and the West dates from this Sixth or even the Seventh Century B.C. still seem good’. K.A.N. Sastri’s CHOLAS, Vol. I. p.29. foot Note.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/37&oldid=1232177" இலிருந்து மீள்விக்கப்பட்டது