பக்கம்:சோழர் வரலாறு.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர். மா. இராசமாணிக்கனார்
85
 


உன்னி உன்னி, இவன் இறந்தபொழுது புலவர் பாடிய பாக்கள்[1] உள்ளத்தை உருக்குவனவாகும்.

“நமன் வெகுண்டு சோழன் உயிரைக் கொண்டிருத்தல் இயலாது; அவன் பாடுவாரைப் போல நின்று கையால் தொழுது வாழ்த்தி இரந்து உயிர்கொண்டானாதல் வேண்டும்”[2] என்றார் நப்பசலையார். “அறிவற்ற நமனே, நாளும் பலரைப் போரிற்கொன்று நினக்கு நல் விருந்தளித்த புரவலனையே அழைத்துக் கொண்ட உன் செயல் விதையையே குற்றி உண்டார் மூடச் செயலை ஒத்ததாகும். இனி, தினக்கு நாளும் உணவு தருவார் யாவர்?”[3] என்றனர் ஆடுதுறை மாசாத்தனார். “பேரரசனாகிய கிள்ளிவளவனைப் புதைக்கும் தாழியை, வேட்கோவே, என்ன அளவுகொண்டு செய்யப் போகிறாய்? அவன் மிகப் பெரியவனாயிற்றே”[4] என வருந்தினர் ஐயூர் முடவனார்.

“குணதிசை நின்று குடமுதற் செலினும்
குடதிசை நின்று குணமுதற் செலினும்
வடதிசை நின்று தென்வயிற் செலினும்
தென்திசை நின்று குறுகாது நீடினும்
யாண்டு நிற்க எள்ளியாம்!
வேண்டிய துணர்ந்தோன் தாள்வா ழியவே!”[5]

என்று கையற்றுப் புலம்பினார் கோவூர்க்கிழார்.

பாக்களால் அறியத்தகுவன: சோழவளநாடு வேள்விகள் மலிந்த நாடு.[6] அக்காலத்தே அறநூல் ஒன்று தமிழகத்தே இருந்தது. அதனைப் புலவர் நன்கறிந்திருந்தனர்.[7] உறையூர் சோழர் கோநகரம் ஆதலின், அங்கு அறங்கூறவையம் இருந்தது.[8] கோட்டை மதிலைச் சூழ ஆழமான அகழி இருந்தது. அதன்கண் முதலைகள் விடப்பட்டிருந்தன.


  1. புறம் 226, 227, 228, 386.
  2. புறம் 226.
  3. புறம் 227.
  4. புறம் 228.
  5. புறம் 386.
  6. புறம் 397.
  7. புறம் 34.
  8. புறம் 39.