பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 53

பின்னலங்காரம் ஒரு தனி விசேஷம். ப்ருஷ்டபாகம் பொன்னில் பிதுங்கிற்று. சுவாமியை ஆயக்காலிலிருந்து துாக்கி மெதுவாக பதினாறுகால் மண்டபத்தைத் தாண்டுகை யில் உற்சவர் திடீரென்று சாய்ந்தார். வாகனமும் சாய்ந்தது. ஒரே ரகளை. தூக்கினவர்களில் ஒருவன் காலி.

புதுவாகனம் முதல் புறப்பாடுக்கு முதல் காவு வாங்கி விட்டதென்று பேசிக்கொண்டார்கள். விசாலத்தின் தங்கை கணவர் அப்படித்தான் சொன்னார். சுவாமியை அவசர அவசரமாகத் துரக்கிக் கொண்டு போய்விட்டார்கள். அப்போது அதில் சகுனம் படிக்க எனக்குத் தோன்றவில்லை. இப்போது தோன்றுகிறது. அதிலும் பலனில்லை. விசாலம் வந்த இடத்திற்குப் போய் சேர்ந்தாச்சு. சுவாமி கல்யாணம் பங்குனி உத்தரத்தின்போது நடக்கும்- அதற்குத் தனிப் பாங்கே உண்டு.

பெரிய காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மனுக்குத் தனி கோவில். அங்கிருந்து சாயங்கால வேளையில் அம்பாள் புறப்படுவாள். இடையில் விஷ்ணு உற்சவர் சேர்ந்து கொள்ளுவார். எந்த உற்சவர் என்று இப்போது எனக்கு நினைவுக்கு வர மறுக்கிறது. காஞ்சீபுரத்தில் விஷ்ணு கோவில்களுக்குப் பஞ்சமில்லை. வரதராஜ பெருமாளே சின்ன காஞ்சீபுரத்தில் எழுந்தருளி இருக்கிறார்.

இரண்டு உற்சவரும் மெதுவாக நடை போட்டுக் கொண்டு, ஏகாம்பரநாதரின் பதினாறுகால் மண்டபத்துக்கு வந்து நிற்க இரவு முதிர்ந்துவிடும்.

ஏகாம்பரநாதரின் உற்சவர் தன் முழு அலங்காரத்தில் சொர்க்கவாசலுள் நிற்பார். உபசாரங்கள் எல்லாம் பூரணமாக நடந்தபின் காமாட்சி அம்மன் மட்டும் புறப்பட்டு பெரியகோவில் சொர்க்கவாசலை நோக்கிச் செல்வாள்.