பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 செளந்தர கோகி லம் அதைக் கேட்ட திவானினது மனத்தில் ஒருவித சந்தேகம் தோன்றியது. முத்துசாமி பாஷாணங் கலந்த வடை தயாரித்த அன்றையதினம் தமக்கும் அவனுக்கும் நடந்த சம்பாஷணையை ஒருவேளை கந்தன் கேட்டிருந்து, பாஷாணம் வைத்துக்கொல்ல நினைத்தவனான முத்துசாமியுடன் கூட இருந்து வேலை செய்வது அபாயகரமானதென்று நினைத்து, அவன் தம்மை விட்டுப் போய்விட எண்ணுகிறானோ என்ற சந்தேகம் உதித்தது. ஆயினும், அவன் கலியாணம் செய்துகொள்ளவேண்டிய நிலைமையிலிருந்தது உண்மையான விஷயமாதலால் அவனைத் தடுக்கவாவது, அவனது உண்மையன கருத்து என்னவென்று கேட்கவாவது திவான் எண்ணவில்லை. ஆகவே, திவான் மிகுந்த அன்பும் பிரியமும் தோற்றுவித்து அவனை நோக்கி, 'கந்தா! நீ கலியாணம் செய்துகொள்ள வேண்டியது முக்கியமான விஷயமே. கலியாணம் செய்து கொண்டபின், யெளவனப் பிராயத்தினளான உன் சம்சாரத்தைத் தனிமையில் அழைத்துக்கொண்டு நீ இவ்வளவு தூரத்தில் மறுபடி வந்து வேலை பார்ப்பதும் உசிதமான காரியமல்ல. ஆகையால், நீ செய்திருக்கும் தீர்மானம் சரியானதே. அதை நான் முழு மனசோடு ஆமோதிக்கிறேன். நீ அப்படியே செய்யப்பா! உன்னுடைய சொந்த ஊர் எது? மாயவரமா?" என்றார். அவர் அவ்வளவு எளிதில் தனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டது பற்றி மிகுந்த மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைந்த கந்தன், 'இல்லை எஜமானே! என்னுடைய சொந்த ஊர் தஞ்சாவூருக்குப் பக்கத்திலுள்ள கண்டியூர்” என்றான். திவான், 'அப்படியா! கண்டியூரா! சரி; நாளைக்கா புறப்பட்டுப் போகப் போகிறாய்?" என்றார். கந்தன், 'ஆம். எஜமான் உத்தரவு கொடுத்தால், விடியற் காலையிலேயே புறப்பட்டுப் போக்குவண்டியில் ஏறிக்கொண்டு போகலாமென்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். நானென்ன முட்டை கட்ட வேண்டுமா? வேறே ஏற்பாடுகள் செய்ய வேண்டுமா? ஒன்றுமில்லை. என் வேஷ்டிகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டால் பிரயாணம் ஆய்விட்டது” என்றான்.