பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 செளந்தர கோகிலம் நாற்பது மைல் தூரத்திற்கப்பாலுள்ள ஊர்களுக்குப்போய்த் தாம் இன்னார் என்பதைக் காட்டிக் கொள்ளாமலேயே இருந்து ஜனங்களோட பழகி அவர்களது நிலைமையை உணர்ந்து கொண்டுவந்து பொது ஜனங்களுக்குத் தேவையான நன்மைகளையும் செளகரியங்களையும் செய்து கொடுப்பார். சர்வாந்தர்யாமியான கடவுளைப்போல, அவர் எந்த நிமிஷத் திலும் எந்த இடத்திலும் காணப்படுவார். ஆனால், அவர் இன்னார் என்பதை எவரும் கண்டுகொள்ளமாட்டார்கள். அவ்வாறு அந்த உத்தமகுண திவான் ஜனங்களுக்குத் தோன்றாத் துணைவராய் இருந்து ஜனோபகாரச் சிந்தையில் ஈடுபட்டு அல்லும் பகலும் அநவரதமும் அதே நோக்கமாய்ப் பாடுபட்டு வந்தார். அது நிரம்பவும் விசாலமான பெரிய சமஸ்தானம், ஆதலால், அந்த ஒரு மனிதரால் ஜனங்களுக்கு எவ்வளவு அதிக மான நன்மைகள் செய்ய இயலுமோ, அதற்குமேல் அதிகமாகவே செய்து வந்தார். ஆனாலும், அவருக்கும் தெரியாமல் ஆங்காங்கு ஏதேனும் குற்றங்குறைபாடுகள் இருந்தும் வந்தன. ஒருநாள் பிற்பகலில் அவர் தமது மோட்டார் வண்டியில் தமது மனையாட்டியை உட்காரவைத்துக்கொண்டு, தமது தலைமை நகரமான திருவனந்தபுரத்தை விட்டுப்புறப்பட்டு அதற்குமுன் தாம் அதிகமாய்ப் போயிராத ஒரு திக்கில் பிரயாணம் செய்துகொண்டு போய்ப் பல ஊர்களையும் கடந்து அவ்வவ்விடத்தின் நிலைமையை அறிந்து கொண்டு வெகுதூரம் சென்று முடிவாக சிந்தாநாஸ்தி என்ற ஒர் ஊருக்குப்போய், அவ்விடத்தில் இருந்த ஒரு தாமரைத் தடாகத்தின் பக்கத்தில் வண்டியை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கித் தமது மனைவியையும் அழைத்துக்கொண்டு அந்தத் தடாகத்தில் நிரம்பவும் நேர்த்தியாக மலர்ந்திருந்த புஷ்பங்களையும் மற்ற வேடிக்கைகளையும் அந்த அம்மாளுக்குக் காட்டியபடி சிறிதுநேரம் நின்று கொண்டிருந் தார். அந்த ஊர் திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தது. ஆனாலும், அது தமிழ் நாட்டின் எல்லையை அடுத்திருந்தது. ஆதலால், அவ்விடத்தில் மலையாள தேசத்தாரும் தமிழ் தேசத்தாரும் கலப்பாகவே குடியிருந்து வந்தனர். அங்கு தமிழ் மலையாளம் ஆகிய இரண்டு பாஷைகளும் பேசப்பட்டதன்றி