காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 107
பல வருஷ காலமாகத் தமக்குக் கிடைக்காத சந்தோஷ்கரமான புதிய செய்தி அப்பொழுது கிடைத்திருப்பதை உணரவே அந்த அசரீரி வாக்கு, “கொஞ்ச காலத்தில் எல்லாம் சரிப்பட்டுப் போகும்” என்று சொன்னதுபோல, ஒருகால் தமது கலியெல்லாம் நீங்கும் காலமும் வருமோவென்ற நம்பிக்கையையும் அவர் கொள்ளத் தொடங்கி வீரம்மாளை நோக்கி, ‘அம்மா! எனக்கு எல்லாச் சங்கதியையும் கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்கள்” என்று நிரம்பவும் உருக்கமாகக் கேட்டுக் கொண்டார்.
உடனே வீரம்மாள் அவரை நோக்கி, “சுவாமிகளே கடைசி யாகத் தாங்கள் என் புருஷரைப் போலீசாருடைய அக்கிரமத் திலிருந்து விடுவித்தபோது நஷ்ட ஈடாக ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்ததன்றி தாங்களும் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தீர் களல்லவா. அதை வாங்கிக் கொண்டு நாங்கள் அதற்கு முன்னிருந்த எங்களுடைய சொந்த ஊருக்குப்போய் அந்த சந்தோஷ சங்கதியை ஊரார் எல்லோருக்கும் தெரிவித்தோம். அதைக் கேட்டு எல்லோரும் அபாரமான சந்தோஷமடைந்து தங்களையும், தங்கள் தேவியரையும் வாயார ஸ்தோத்திரம் செய்து மனதால் வாழ்த்தியதன்றி எங்களையும் ஆசீர்வதித்து எங்களுக்கு ஒரு வீட்டைக் கொடுத்து, அதில் எங்களுடைய குடித்தனத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அதன் பிறகு ஒரு துறையில் எங்களுடைய ஜீவனத்துக்கு வழிசெய்து கொள்ள வேண்டுமென்று நினைத்துப் பலவிதமாக யோசித்துக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று எங்களுக்கு ஒரு சந்தோஷச் செய்தி கிடைத்தது. இந்த ஊரில் என் புருஷருடைய தாயாதி ஒருவர் பெரிய உப்பளத்தின் சொந்தக்காரராய் இருந்தார். அவர் வாரிசு இல்லாமல் இறந்து போய் விட்டதாகக் கேள்வியுற்றோம். அவர்களுக்கு நாங்களே அனந்தர வாரிசு என்றும், நாங்கள் அதைப்பற்றி கலெக்டருக்கு மனு எழுதிக் கொண்டால், அந்தச் சொத்து எங்களுக்குக் கிடைத்து விடுமென்றும் எங்கள் சொந்த ஜனங்கள் சொன்னார்கள். அதைக் குறித்து நாங்கள் உடனே ஜில்லா கலெக்டருக்கு மனு எழுதிப் போட்டோம். அதன்மேல் விசாரணை நடந்தது. முடிவில் எங்களுக்கு அது ஜெயமாக முடிந்தது. நாங்கள் இந்த உப்பளத்தை ஒப்புக்கொண்டோம்.