பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1C3 செளந்தர கோகிலம்

உப்பளத்து மேலதிகாரியான ஒரு துரையின் யோசனையின்மேல், நாங்கள் எங்களிடமிருந்த மூவாயிரம் ரூபாயில் பெரும் பாகத்தையும் செலவு செய்து சென்னப்பட்டணத்திலிருந்து சில யந்திரங்களை வரவழைத்து உபயோகித்து, அதை விருத்தி செய்யத் தொடங்கினோம். உப்பளத்தில் நாங்கள் எதிர்பார்த் ததைவிட அபாரமான வருமானம் கிடைக்க ஆரம்பித்தது. எங்களுக்கு உண்டான சந்தோஷம் இவ்வளவு அவ்வளவென்று சொல்ல முடியாது. மகாப் பிரபுவாகிய தாங்கள் கொடுத்த பணம் உப்பாக விளையாமல் அத்தனையும் தங்கமாகவே விளைந்த தென்றும் சொல்ல வேண்டும். எல்லாம் தங்களுடைய கைராசி யென்றும் தங்களுடைய ஆசீர்வாத பலனென்றும் நாங்கள் நினைத்ததன்றி, உடனே புறப்பட்டு ஒரு நடை திருவனந்தபுரத் திற்கு வந்து தங்களையும் தங்கள் தேவியாரையும் தரிசித்து எங்களுடைய அதிர்ஷ்டத்தைத் தெரிவித்துக் கால் கும்பிட்டுவிட்டு வரவேண்டுமென்று நானும் என் புருஷரும் தீர்மானித்துக் கொண்டு, இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுத் திருவனந்தபுரத் திற்குப் போய்ச் சேர்ந்து, தாங்கள் முன்பு இருந்த ஜாகையை யடைந்து விசாரித்தால், பெருத்த இடி விழுந்ததுபோல அங்கே மகா துக்ககரமான சங்கதி கிடைத்தது. சுமார் ஆறுமாச காலத்திற்கு முன்பே தாங்கள் புலியினால் அடிபட்டு இறந்து போனதாகவும், திருவடமருதுருக்குப் போன தங்கள் குழந்தையும் சம்சாரமும் எங்கேயோ காணாமல் போய்விட்டதாகவும், தங்கள் தகப்பனார் வந்து சொத்துக்களையெல்லாம் எடுத்துக்கொண்டு போனதாகவும் அங்கே இருந்தவர்கள் சொன்னார்கள். அதைக் கேட்கவே, எங்களுடைய உயிரே போன மாதிரி ஆய்விட்டது. ஐயோ! எங்கள் குலதெய்வங்கள் இரண்டையும் கடவுள் இப்படிப்பட்ட அநியாயக் கொடுமைக்கு ஆளாக்கிவிட்டாரே யென்று நாங்கள் இருவரும் நினைத்து நினைத்து அழுதழுது, அதன்பிறகு சரியாய் ஒரு மாச காலம் பட்டினி கிடந்தோம். அதன் பிறகு எங்களுக்கு இந்த ஊரிலேயே இருக்கை கொள்ள வில்லை. எங்களுக்கு ஏற்பட்ட அமிதமான சந்தோஷத்தை அதை விடப் பன்மடங்கு அமிதமான துக்கம் அடியோடு அடக்கிச் சீர்குலைத்துவிட்டது. எங்களுடைய செல்வமும், செல்வாக்கும் வெகும் வெளிப்பகட்டாக இருந்தனவேயன்றி நாங்கள்