பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 செளந்தர கோகிலம்

குத்தலாகவும் குறும்பாகவும் வியாக்கியானம் செய்து, அவர் மேலப்பண்ணை முதலியாரையும், அவரது மனைவியையும், முடிவில் நியாயாதிபதியையும் அவமதித்துப் பேசிவிட்டாரென்ற அபிப்பிராயமே அங்கிருந்த எல்லா ஜனங்களது மனத்திலும் பட்டது. ஆகையால், அவர்கள் மிகுந்த ஆத்திரமும், ஆவேசமும் அடைந்து பதைபதைத்து திவான் சாமியாரை நன்றாக அடித்துக் கொன்றுவிட வேண்டுமென்று நினைத்துத் துடிதுடித்து நின்றனர். அதன் பிறகு வேறு மூன்று மிராசுதார்களும் தட்டாரக் கிருஷ்ணபத்தரும் ஒருவர்பின் னொருவராய் வரவழைத்து விசாரிக்கப்பட்டனர். அவர்கள், அதற்குமுன் வாங்கப்பட்ட வாக்கு மூலங்களுக்கு அநுசரணையாகவே, தங்களது வாக்கு மூலங்களைக் கொடுத்தனர். ஒவ்வொருவரது வாக்கு மூலமும் முடிந்தவுடன் நீதிபதி திவானைப் பார்த்து குறுக்கு விசாரணை ஏதேனும் உண்டா என்ற பாட்டைப் பாடித் தீர்க்க, திவான் சாமியார் ஒன்றுமில்லை யென்று கூறிவிட்டார்.

உடனே நியாயாதிபதி பிராசிகூடிங் இன்ஸ்பெக்டரை நோக்கி, ‘இவ்வளவு பேர்தானா, இன்னம் சாட்சிகள் இருக்கிறார்களா?” என்றார்.

பிராசிகூடிங் இன்ஸ்பெக்டர், “சாட்சிகள் ஆயிரக்கணக்கில் வேண்டுமானாலும் இருக்கிறார்கள். இப்போது இவர்கள் சொன்னதையே தான் மற்றவர்கள் சொல்லப் போகிறார்கள். ஆகையால், எல்லோரையும் வரிக்கவில்லை” என்றார்.

நீதிபதி : இவர்களுடைய சாட்சியமே போதுமானது. இனி எதிர்க்கட்சியை விசாரிக்கலாம். ஐயா சாமியாரே! இவர்கள் சொன்னவைகளையெல்லாம் கேட்டிரே! நீர் இந்தக் குற்றங்களைச் செய்திரா இல்லையா?

திவான் சாமியார் : நான் எவ்விதமான குற்றமும் செய்ததாக சாட்சிகளுள் யாரும் சொல்லவில்லையே குழந்தையின் மேலிருந்த நகைகளை நான் சுழற்றியதைப் பார்த்ததாக யாரும் சொல்லவில்லையே! என் சட்டைப் பையில் நகையின் ஒரு துண்டு இருந்ததைக் கண்டு எடுத்ததாக இவர்கள் சொல்லு கிறார்கள். அதை நான் ஆதியிலிருந்தே ஒப்புக் கொண்டேன்.