பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

வட ஆற்காடு ஜில்லா

அனேகமாய் வருஷத்தில் பெரும்பாகம் இந்நதிகள் வரண்டு கிடக்கக் காணலாம். மழை காலங்களில் பெரிய வெள்ளம் ஏற்பட்டு இவைகள் அதிவேகத்துடன் ஓடும் பொழுது இவைகளைக் கடக்கமுடியாத காட்டாறுகளாகவே காணலாம். ஆனால் இந்த வெள்ளம் நீடித்திராமல் இரண்டொரு தினங்களில் வடிந்துபோகும். எவ்வளவு சீக்கிரத்தில் பெருகுகின்றனவோ அவ்வளவு சீக்கிரமாகவே இவை வடிந்தும் விடுகின்றன. இந்த நதிகளில் ஒரு விசேஷம். இவைகள் அந்தர்வாகினிகள். கீழே நீர் ஓட்டம் வாய்ந்துள்ள நதிகளானதால் 'கஸம்' எனப்படும் கால்வாய்கள் இந்த வரண்ட நதிகளிலிருந்து வெட்டி அவைகளில் ஓடும் ஜலத்தைக்கொண்டு பக்கத்திய நிலங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

சீதோஷ்ண நிலைமையில் இந்த ஜில்லா வரட்சி பொருந்தித் தேக ஆரோக்கியம் வாய்ந்தது. சமவெளிகளில் உஷ்ணம் அதிகமே யெனினும் சசிக்க முடியாத உஷ்ணமல்ல. உயர்ந்த மேற்குப் பிராந்தியங்களில் சீதோஷ்ண நிலைமை ஆரோக்கியமானதாயும் இன்பமான தாயுமிருக்கிறது.

ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பகலில் காற்று தென்மேற்காகவும், இராக் காலங்களில் கிழக்குத் தென்கிழக்காகவும் வீசும். அக்டோபர் மாதம் தொடங்கிக் காற்று வட கிழக்குக்காற்றாக மாறி அங்கிருந்து பருவக்காற்று வீசுவதாக ஏற்படும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் தான் இங்கு அதிக மழை பொழிகிறது. சிற்சில சமயங்களில் புயல் காற்றும் அடிப்பதுண்டு.