பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வுக்கு அழைத்துக்கொண்டுபோய்க் காப்பி பலகாரம் வாங்கிக் கொடுத்து, தன்னிடம் சரக்கு எடுக்கும்படி தூண்டுகிறான். பெ.வா.' என்றார். "அப்படியா" என்றார் செட்டியார். இருவருமாகக் கடையைவிட்டுப் புறப்பட்டு அம்பிகா பவன் போனார்கள். ஆசாமிகளைக் கண்டார்கள். அங்கே பெ.வா. இல்லை! மூவருக்கும், செட்டியார் செலவிலே காப்பி வகையறா நடந்தது. 2-8-0 பில்! பிறகு கடைக்கு வந்து சேர்ந்தனர் அனைவரும்.

"வாடகைப் பணம் வந்திருக்கு" என்று குமாஸ்தா சொன்னார். செட்டியார் அந்தச் சமயத்திலே, வாழைக்காய் வற்றலுக்கும் உருளை வற்றலுக்கும் உள்ள வித்யாசத்தைச் சேலத்தாருக்கு விவரித்துக் கொண்டிருந்தார். குமாஸ்தா, இரண்டு மூன்று தடவை ஜாடையாகச் சொன்னான், செட்டியார் காதிலே விழவில்லை. சேலத்து வியாபாரிகள் போனபிறகு, (போகுமுன் 1-8-0 ரூபாய் ஆரஞ்சு தீர்ந்துவிட்டது.) செட்டியார், குமாஸ்தாவைக் கூப்பிட்டார்.

"இதோ பாரப்பா நான் நல்லதனமாகச் சொல்றேன் கேள். உன் நடவடிக்கையே நமக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை" என்றார். குமாஸ்தா பதில் சொல்ல ஆரம்பித்தார். செட்டியாரின் குரல், உரத்துவிட்டது. "எதிர்த்துப் பேசாதே, கடையை விட்டு கீழே இறங்கு, மரியாதையோடு நட" என்று மள மளவென்று வார்த்தைகளை வீசினார். குமாஸ்தா மௌனமாகிவிட்டார். பத்து நிமிஷத்துக்குப் பிறகு, செட்டியார் விசாரணை நடத்தலானார். "கோபம் வந்துவிடுகிறது உனக்கு. ஒரு வேலைச் சரியாக செய்கிறயா? வாடகைப் பணத்தை வசூல் செய்யச் சொல்லலே உன்னை?"

18