பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இது, வேலாயுதத்தின் சாமர்த்தியம்! முதலாளித்துவ உலகிலே, "முதல்தரமான அறிவு" என்று இதற்குப் பெயர். கண்டுபிடிக்கமுடியாத கபடம், நாசூக்கான நயவஞ்சகம், சொகுசான சூதுகள், பொய்யுரைகள், வேலாயுதம் வீசிய கணைகள், ஆனால், அந்த உலகிலே அவைகளை வீசுபவரைக் கபடன், நயவஞ்சகன், புளுகன், என்றெல்லாம் கூறமுடியாது. அபாரத் திறமை, பேரம் பேசுவதிலே நிபுணர், வியாபாரத் தந்திரம் அறிந்தவர், எடுத்த காரியத்தை எப்படியாவது முடிக்கக்கூடியவர் என்ற 'விருதுகள்' அவருக்குக் கிடைக்கும்! காரியத்தைச் சாதிக்க, இலாபத்தைக் குவிக்க, உண்மையை உள்ளத்தைவிட்டே விரட்டிவிடலாம். குற்றமல்ல!!

"முட்டாள்! மூன்றுமணிக்கு வாச் சொன்னேனே. ஏன் வரவில்லை?” என்று கோபமாகக் கேட்கிறார் வேலாயுதம் வேலைக்கார வேணுவை

"வந்தேனுங்க" என்கிறான் வேனு, புளுகு பேசியாவது அந்த நேரத்தில் எஜமானரின் கோபத்திலிருந்து தப்பித்துக்கொள்ள. ஆனால், வேலாயுதமோ, முன் இருந்ததை விட அதிக சீற்றம் கொள்கிறார்.

"டே, வேணு! புளுகுபேசியா ஏமாற்றலாம் என்று பார்க்கறே. என்னிடமா புளுகுபேசுவது? எந்தத் தவறு செய்தாலும் மன்னித்துவிடுவேன்; புளுகு பேசினால் மட்டும் விடமாட்டேன். அவனுடைய முகாலோபனம் செய்யமாட்டேன். தெரிகிறதா பாவிப்பயலே! புளுகு பேசினால வாய் புழுத்துப் போகும்" என்று ஏசுகிறார். சத்தியத்தின் மேன்மைபற்றி உபதேசிக்கிறார். வேணுவுக்கு தெரியும். பொன் விளையும் பூமியைப், பூதப்பண்ணை என்று புளுகு

27