பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

"போதுமா! இன்னமும், வெற்றிவேல் பிரசின் வேலைப் பாட்டுக்கு உதாரணம் காட்டவேண்டுமா? நோடீசுகள் ஒழுங்காக இருக்கும். குறித்த காலத்திலே தருவோம். 1920-ல் ஆரம்பித்தோம், சார்! அதற்கு பிறகு இதே ஊரிலே, காளான்போலக் கிளம்பின எத்தனையோ பிரஸ் ஒன்றாவது நிலைக்கணுமே! அதுதான் கிடையாது. வெற்றிவேல் பிரஸ் என்றால், வெற்றிவேல்தான்" என்று அச்சகத் தோழர், அவருடைய அச்சுக்கூடத்திலே, அதுவரை தயாரான பல துண்டு நோடிசுகள் தைத்து வைக்கப்பட்ட சாம்பிள் புத்தகத்தைக் காட்டிவிட்டுக் கூறினார். எனக்கு அவருடைய பேச்சு காதில் விழுந்ததே தவிர, கருத்து அங்கே இல்லை. புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கையில் என் கருத்தை இழுத்த 4நோடீசுகளிலேயே கவனமாகி விட்டேன்.

"என்ன சார் யோசனையா? காட்டுங்கள், உங்க நோடீசு என்ன விஷயம்" என்று கேட்டுக்கொண்டே, அச்சடிக்க நான் கொண்டு போயிருந்த விஷயத்தை வாசிக்கலானார் நான் வெட்கத்துடன் அதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

சாது சேவாசிரமம்

இமயமலையிலே இருபதாண்டு தவம் செய்து இஷ்ட சித்தி வரம்பெற்ற சாது சரவணபவானந்தர், நமது ஊரிலே, மகாஜனங்களின் நன்மையைக் கோரி, சேவாசிரமம் ஏற்படுத்தியிருக்கிறார். இங்கு பில்லி, சூன்யம் முதலியவற்றாலும், ஏவல்,பிசாசு முதலிய தொல்லையாலும் கஷ்டப்படுப்வருக்கு ரட்சைகள் தரப்படுவதுடன், கிரஹ தோஷ பூஜையும் நடத்தப்படும். இதற்கு சார்ஜ் கிடையாது. அவரவர்கள் இஷ்டம்போல தர்மம் செய்யலாம். பச்சிலை தரப்படும். பாம்பு கடிக்கு மருந்து போடப்படும்.

சாது சேவாசிரமம்.

39