பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெண்கள் விஷயமா அக்ரமந்தானே செய்தா. லோக நாயகியை, கர்ப்பிணியா இருக்கச்சே கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்டூட்டு வரச் சொல்லலையோ அந்த இராமன்" என்று சகதர்மிணி. ஆதியிலிருந்து அந்தம்வரை ஒரு குலுக்கு குலுக்குவதென்ற தீர்மானத்திலே, பேசலானாள். தனக்கு மட்டுமல்ல, தாசரதிக்கே இடி கிடைக்கிறது என்று சனாதனிச் சர்மாவுக்குக் கோபம் பிறந்துவிட்டது. "இராமன் செய்த காரியத்தைப் பழிக்கிறயோ? அந்தச் சீதை, ஏண்டி இராவணனுடைய கிரஹத்திலே, பத்து மாதம் இருந்தா? பத்து மாத காலம் பரக் கிரஹத்திலே ஒருவள் வாசம் செய்தா, அவளைப்பற்றிச் சந்தேகம் உதிக்காதோ" என்று இராமருக்கு, ஐயர் வக்கீலானார். சகதர்மிணி இதற்குப் பயப்படவில்லை. "ஏன் இருந்தாளா? அந்த இராமன் செய்த காரியத்தாலேதான், சீதாவுக்கு அந்தக் கதி ஏற்பட்டது" என்று டிபென்சு தரப்பு ஆரம்பித்து, "அந்தச் சூர்ப்பனகையைக் காது மூக்கு அறுத்ததாலே, ராவணனுக்குக் கோபம் பிறந்து, சீதையைத் தூக்கிக்கொண்டுபோனான்" என்றாள். "அப்படின்னா, சூர்ப்பனகையை இராமன் பாணிக் கிரகணம் செய்துண்டு வாழணும்னு பேசறியோ நீ. ஏண்டி நோக்கு சாஸ்திரமென்னடி தெரியும்? தாரமிருக்கும்போது தசரதகுமாரன், சூர்ப்பனகையை எப்படியடி ஏற்றுக் கொள்ளமுடியும்?” என்று குறுக்குக் கேள்வி போட்டார், ஐயர். ஒருவள் இருக்கையிலே இன்னொருவள் கூடாதுன்னு எந்தச் சாஸ்திரம் சொல்கிறது? யார் அதுபோல் நடந்தா? தசாதனுக்கு 60 ஆயிரமாமே! அவன் நாசமாய்ப் போக, அறுபகாயிரம் மனைவி வைச்சிண்டு இருந்தானாமே? அவன் மகனுக்கு ஒண்ணேபோதும்னு, வேறொருத்திவந்தா அவளைப் பங்கம் செய்கிறதுதான் நியாயம்னு தோணும்போலிருக்கு! ரொம்ப நியாயமன்னோ அவன் செய்தது' என்று

45