பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூடினார், வயிறுகிள்ளுவது பொறுக்கமுடியாது புரண்டார், புலம்புவதற்குப் பதிலாக, "இராமா! ரகுநந்தனா!ரகுபதே! லோகரட்சகா! என்று கூவிக்கொண்டிருந்தார். இதற்குள், அம்மையார், தெருவாசற்படிக்கு வந்து நின்றார்கள் உரத்த குரலிலே, "அடி! அலமு! அலமு! என்று கூப்பிடவே, எதிர் வீட்டிலிருந்து ஒரு குட்டி ஓடிவந்து, "அத்தே! கூப்பிட்டேளா?" என்று கேட்டாள். "ஆமாண்டி அசடே கொத்தமல்லி துவையலிருக்கு. நோக்கு வேண்டுமோ?" என்று கேட்டாள் சகதர்மிணி. "கொத்தமல்லித் துவையலா? நீங்க செய்தா அது ரொம்ப நன்னாயிருக்குமே. கொடுங்கோ அத்தே" என்று குட்டி சந்தோஷத்தோடு கேட்டாள். துவையல், வற்றல், சாம்பார்,தனித் தனிப் பாத்திரத்திலே, எதிர்வீடு போய்ச் சேரக் கண்டார் சர்மா. "சர்வேஸ்வரா, லோகாட்சகா" என்று அலறிக்கொண்டே, தெருத் திண்ணைக்குச் சென்று அமர்ந்தார். பக்கத்து வீட்டுக்காரர்தான்,சர்மாவை, உண்ணாவிரதம் இருக்கும்படி

தூண்டியவர்; சத்யம் வாங்கியவர். அவர், சாருமணையிலே சாய்ந்துகொண்டிருந்தார். அவருடைய திருவாயிலிருந்து சர்வேஸ்வரா போன்ற சத்தம் வரவில்லை. மெல்லிய குறட்டைதான் வந்துகொண்டிருந்தது. சர்மா மெள்ள எழுந்தார். தள்ளாடிக்கொண்டு பக்கத்து வீடு சென்றார். "ஒய் குப்பு சாஸ்திரி! என்ன குறட்டை பலமாக இருக்கே" என்று கேட்டுக்கொண்டே தோளைப் பிடித்துக் குலுக்கி எழுப்பினார். திடீரென விழித்துக்கொண்ட சாஸ்திரியார். "அக்கார வடிசலுக்கே கொஞ்சம் மயக்கமூட்டும் சுபாவம் உண்டுபோலிருக்கு; அதைக் கொஞ்சம், இரண்டுகை அதிகமாச் சாப்டுட்டேன், ஒரேமந்தமா இருக்கு, சித்தெ கண்ணை மூடினேன்" என்றார். சர்மாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. "என்ன ஓய் சொல்றேள்? அக்கார வடிசல் சாப்டீரா?

48